

மும்பை,
துலேவை சேர்ந்த விவசாயி தர்மா பாட்டீல் (வயது84). இவருடைய நிலத்தை அரசு சோலார் மின் திட்டத்துக்காக கையகப்படுத்தியது. ஆனால் அந்த நிலத்திற்கான உரிய நிவாரணத்தை அரசு தராத விரக்தியில் தர்மா பாட்டீல் மும்பையில் உள்ள மாநில அரசின் தலைமை செயலகமான மந்திராலயாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விஷம் குடித்தார்.
பின்னர் சில நாட்களுக்கு பிறகு அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மந்திராலயாவில் விஷம் குடித்து விவசாயி பலியான சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ள மராட்டிய சட்டசபை தேர்தலில் தர்மா பாட்டீலின் மகன் நரேந்திர பாட்டீல் போட்டியிடுகிறார். அவரை ராஜ்தாக்கரேயின் நவநிர்மாண் சேனா கட்சி தேர்தல் களத்தில் இறக்கி உள்ளது.
நவநிர்மாண் சேனா வெளியிட்ட 27 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெற்று உள்ளது. புல்தானா மாவட்டத்தில் உள்ள சிந்த்கெட்ராஜா தொகுதியில் நவநிர்மாண் சேனா வேட்பாளராக தர்மா பாட்டீல் போட்டியிடுகிறார்.