மாமல்லபுரம் போலீஸ்நிலையம் முன்பு - திரண்ட பொதுமக்களால் பரபரப்பு

மின்வாரிய தொழிலாளரை தாக்கியவரை கைது செய்ய வலியுறுத்தி மாமல்லபுரம் போலீஸ் நிலையம் முன்பு திரண்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
மாமல்லபுரம் போலீஸ்நிலையம் முன்பு - திரண்ட பொதுமக்களால் பரபரப்பு
Published on

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் மீனவர் பகுதியில் தரைவழி மின்சாரவயர் புதைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இந்த பணியில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பலர் இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணியில் மின்வாரிய தொழிலாளர் பிரகாஷ் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அதே மீனவர் பகுதியை சேர்ந்த ராஜி (வயது 42) என்பவர் மின்சார வயர் புதைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பிரகாஷை கடுமையாக தாக்கினார்.

இதில் அவர் படுகாயம் அடைந்தார். இது குறித்து மாமல்லபுரம் மின்வாரிய உதவி பொறியாளர் வினோத்குமார் மாமல்லபுரம் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ராஜி தலைமறைவாகி விட்டார்.

இதற்கிடையில் மின்வாரிய தொழிலாளரை தாக்கிய ராஜி அடிக்கடி இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவரை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கக்கோரி மாமல்லபுரம் மீனவ கிராம பொதுமக்கள் கூட்டமாக 100-க்கும் மேற்பட்டோர் மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தின் முன்பு திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமாரை சந்தித்து ராஜியை கைது செய்ய வலியுறுத்தி மீனவர் கிராம பொதுமக்கள் சார்பில் புகார் அளித்தனர்.

பின்னர் மாமல்லபுரம் காவல் உட்கோட்ட உதவி கண்காணிப்பாளர் சுந்தர வதனத்தையும் சந்தித்து மின்வாரிய தொழிலாளரை தாக்கிய ராஜியை கைது செய்ய மீனவர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டதால் மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com