மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கரை வலை மீன்பிடிப்பு சீசன்

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கரை வலை மீன் பிடிப்பு சீசன் தொடங்கி உள்ளது. தனுஷ்கோடி மீனவர்கள் வலையில் 1 டன் வரையிலும் சூடை மீன்கள் சிக்கின.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கரை வலை மீன்பிடிப்பு சீசன்
Published on

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக விளங்கி வருகின்றது.மாவட்டத்திலேயே அதிகமான மீன் பிடி படகுகள் மற்றும் மீனவர்களையும் கொண்ட பகுதி ராமேசுவரம் தீவு பகுதி தான். அதுபோல் மீனவர்கள் நாட்டுப் படகு,விசைப் படகுகளிலும் சென்று மீன் பிடித்து வந்தாலும் தனுஷ்கோடி பகுதியில் இன்னும் பழமை மாறாமல் ஏராளமான மீனவர்கள் கரை வலை மீன் பிடிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி தென் கடலான மன்னார் வளை குடா கடல் பகுதியில் கரை வலை மீன் பிடிப்பு சீசன் தொடங்கியுள்ளது.தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரத்திற்கும்-கம்பிபாடுக்கும் இடைப் பட்ட தென் கடல் பகுதியில் நேற்று 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை வலை மீன் பிடிப்பில் ஈடுபட்டு வந்தனர்.சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கடலில் வீசப்ட்ட வலைகளை கரையில் இழுத்து பார்த்த போது சூடை,காரல்,கணவாய் உள்ளிட்ட பல வகை மீன்கள் வலையில் சிக்கியிருந்தன.இதில் சூடை மீன்கள் மட்டும் 1 டன் வரையிலும் கிடைத்திருந்தன.வலையில் சிக்கிய மீன்களை மீனவர்கள் சரக்கு வாகனம் மூலம் ராமேசுவரத்தில் உள்ள கம்பெனிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி தனுஷ்கோடி மீனவர் முனியசாமி கூறியதாவது:- ஆண்டுதோறும் மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலும் வடக்கு கடல் பகுதியில் கடல் கொந்தளிப்பு இல்லாமல் இருக்கும் என்பதால் இந்த 6 மாதங் களில் வடக்கு கடலான பாக்ஜலசந்தி கடல் பகுதியில் கரை வலை மீன் பிடிப்பில் ஈடுபடுவோம்.அது போல் நவம்பர் மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரையிலும் தென் கடலான மன்னார் வளைகுடா கடலில் கடல் கொந்தளிப்பு இல்லாமல் அமைதியாக இருக்கும் என்பதால் இந்த சீசனில் தென் கடல் பகுதியில் கரை வலை மீன் பிடிப்பில் ஈடுபடுவோம்.அது போல் இந்த ஆண்டு தென் கடல் பகுதியில் கரை வலை மீன் பிடிப்பு சீசன் தொடங்கி 1 வாரமாகிறது.

இந்த ஆண்டு ராமேசுவரம்,தனுஷ்கோடி பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால் வழக்கத்தை விட அதிகமான மீன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம். கரை வலை மீன் பிடிப்பில் கடந்த 1 வாரமாகவே சூடை மீன் அதிகமாகவே கிடைத்து வருகின்றது.சூடை மீன் 1 கிலோ ரூ.10-க்கு வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.சூடை மீனானது கேரளாவிற்கு அனுப்பப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.கரை வலை மீன் பிடிப்பில் பிடிபடும் மீன்கள் அதிக ருசியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com