மயிலாடுதுறை நகர் பகுதியில் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

மயிலாடுதுறை நகர் பகுதியில் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை நகர் பகுதியில் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
Published on

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. நகர் பகுதியில் தினமும் வீடுகள், வணிக வளாகங்களில் தேங்கும் குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்த நகராட்சி மூலம் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் 11 வார்டுகளில் குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்த தனியார் நிறுவனத்திற்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நகரின் பல பகுதிகளில் தினமும் சேரும் குப்பைகளை அன்றைய தினமே அகற்றப்படுவதில்லை. அவ்வாறு குப்பைகளை சேகரித்தாலும் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுகிறது.

இதேபோல் மயிலாடுதுறை கூறைநாடு தோப்பு தெரு பகுதியில் இலவச பொது கழிப்பிட கட்டிடத்திற்கு எதிரே குப்பைகள் கொட்டப்பட்டு தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் சுகாதாரமற்ற முறையில் குப்பைகள் தேங்கி கிடப்பதுடன், துர்நாற்றமும் வீசுகிறது.

இதனால் அந்த பகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களும், அந்த வழியாக செல்லும் பொதுமக்களும் முகம் சுழித்தப்படியே செல்கின்றனர். எனவே, மயிலாடுதுறை நகர் பகுதியில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், பொதுமக்கள், வணிக நிறுவனங்களில் உரிமையாளர்கள் ஆகியோர் தினமும் சேரும் குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து கொடுக்கவும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினை 100 சதவீதம் தவிர்த்து நகராட்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com