மயிலாடுதுறையில் பரபரப்பு: வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள் “அலாரம்” ஒலித்ததால் தப்பி ஓடினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறையில் பரபரப்பு: வங்கியின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
Published on

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு காந்திஜி சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிளை இயங்கி வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்றாலும் ஊழியர்கள் மதியம் 3 மணி வரை வங்கியில் பணியாற்றினர். பின்னர் வழக்கம்போல் வங்கியின் முன் பக்கம், பின் பக்கம் மற்றும் பக்க வாட்டில் உள்ள கதவுகளை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர். இதில் பக்க வாட்டில் உள்ள கதவு வழியாக அப்பகுதியில் உள்ள காலிமனைக்கு செல்ல வழி உள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணி அளவில் வங்கியின் பக்க வாட்டில் உள்ள காலி மனை வழியாக மர்ம நபர்கள் சிலர் வங்கிக்குள் நுழைந்தனர். அவர்கள் பக்க வாட்டில் இருந்த கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வங்கியின் பாதுகாப்பு பெட்டக அறையின் கதவை உடைக்க முயற்சித்தபோது அலாரம் (எச்சரிக்கை மணி) ஒலித்தது.

இதனால் வங்கிக்கு அருகே கடை வைத்துள்ள வியாபாரிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் வங்கிக்கு ஓடிச்சென்று பார்த்தனர். அப்போது வங்கிக்குள் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் மற்றும் போலீசார் வங்கிக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது முன் பக்கத்தில் உள்ள ஷட்டர் பூட்டப்பட்டிருந்தது. அதன் பூட்டு உடைக்கப்படவில்லை.

இதையடுத்து போலீசார் காலி மனை வழியாக சென்று பார்த்தபோது அங்கிருந்த கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அலாரம் ஒலித்ததாலும், வங்கியின் முன்பாக ஆட்கள் கூடியதாலும் பாதுகாப்பு பெட்டக அறையில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்க செய்த முயற்சியை கைவிட்டு, காலி மனை வழியாக மர்ம நபர்கள் தப்பி ஓடியது தெரியவந்தது.

வங்கியில் கொள்ளை அடிப்பதற்கு வசதியாக மர்ம நபர்கள் மின்சாரத்தை துண்டித்து விட்டு உள்ளே புகுந்ததையும் விசாரணையின்போது போலீசார் கண்டுபிடித்தனர். கொள்ளை முயற்சி நடந்த வங்கி மயிலாடுதுறை நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியில் எப்போதும் ஆட்கள் நடமாட்டம் இருக்கும். இந்த நிலையில் வங்கியில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி போலீசார் கூறியதாவது:-

வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டபோது அதில் ஒருவரின் உருவம் பதிவாகி உள்ளது அதை அடிப்படையாக கொண்டு கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களுக்கு வலைவீசி உள்ளோம். இவ்வாறு போலீசார் கூறினர். இந்த சம்பவம் குறித்து வங்கி மேலாளர் கங்காதரராவ், மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தக்க சமயத்தில் அலாரம் ஒலித்ததால் வங்கியில் இருந்த நகை, பணம் தப்பியது குறிப்பிடத்தக்கது.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com