மயிலாடுதுறையில், பணபரிவர்த்தனை மூலம் கூட்டுறவு வங்கியில் ரூ.60 லட்சம் மோசடி நாகை சைபர் கிரைம் போலீசார் விசாரணை

மயிலாடுதுறையில், பண பரிவர்த்தனை மூலம் கூட்டுறவு வங்கியில் ரூ.60 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாகை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மயிலாடுதுறையில், பணபரிவர்த்தனை மூலம் கூட்டுறவு வங்கியில் ரூ.60 லட்சம் மோசடி நாகை சைபர் கிரைம் போலீசார் விசாரணை
Published on

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், மாயூரம் நகர கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் கடந்த 12-ந் தேதி வாடிக்கையாளர்களுக்கு கடன் தொகை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது வங்கியின் குறிப்பிட்ட நடப்பு கணக்கில் இருப்புத்தொகை இல்லாதது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி அலுவலர்கள், வங்கி கணக்கை சரிபார்த்தனர். அப்போது வங்கியின் நடப்பு கணக்கில் இருந்து கடந்த 3.11.2018 முதல் 12.11.2018 வரை 10 நாட்களில் 8 தவணைகளாக ரூ.60 லட்சம் வரை பணவர்த்தனை மூலம் மோசடி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

வங்கி கணக்கில் இருந்து புதுடெல்லியில் உள்ள எச்.டி.எப்.சி. வங்கி, சிங்கப்பூரை சேர்ந்த டி.சி.பி. வங்கி ஆகிய வங்கி கிளைகள் மூலம் சுரேஷ்சிங் என்ற நபர், மாயூரம் கூட்டுறவு நகர வங்கியின் யூசர் ஐடியை பயன்படுத்தி ரூ.60 லட்சத்தை நூதன முறையில் அவரது புதுடெல்லி வங்கி கணக்குகளுக்கு ஆர்.டி.ஜி.எஸ். எனப்படும் வங்கிகளுக்கு இடையிலான பணபரிவர்த்தனை சேவை மூலம் மோசடி செய்து இருப்பது தெரிய வந்தது.

இது தொடர்பாக மாயூரம் கூட்டுறவு நகர வங்கியின் பொது மேலாளர் பாலு, மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு மற்றும் குற்றப்பிரிவு போலீசார், டெல்லி வங்கி கிளைகளில் கணக்கு வைத்து மோசடியில் ஈடுபட்ட சுரேஷ்சிங், மாயூரம் கூட்டுறவு நகர வங்கியின் உதவி பொது மேலாளர் மணிமாறன், மேலாளர் முத்துக்குமார், உதவி மேலாளர் தையல்நாயகி மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் இந்த வழக்கு அதிக தொகை கொண்ட பொருளாதார குற்றப்பிரிவின் கீழ் வருவதால் இந்த வழக்கை மயிலாடுதுறை போலீசார் நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம் செய்தனர். அதன்பேரில் நாகை மாவட்ட குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

வங்கிகளுக்கு இடையேயான பண பரிவர்த்தனையில் ஈடுபட பயன்படுத்தப்படும் யூசர் ஐ.டி.யை சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி நிர்வாகத்தினர் மற்றும் மாயூரம் கூட்டுறவு நகர வங்கியில் பணிபுரியும் யூசர் ஐ.டி.யை பயன்படுத்தும் அலுவலர்கள் ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் கடந்த 7-ந் தேதி மாயூரம் கூட்டுறவு நகர வங்கியில் இருந்து சென்னை தலைமை கூட்டுறவு வங்கிக்கு ரூ.30 லட்சம் பணபரிமாற்றம் செய்ததை ஏன் சென்னை வங்கி கிளை உறுதிப்படுத்தவில்லை என்ற கோணத்திலும், சென்னை தலைமை கூட்டுறவு வங்கிக்கும், மாயூரம் கூட்டுறவு நகர வங்கிக்கும் இடையில் பணபரிவர்த்தனையின்போது அதனை உறுதி செய்ய ஒரே ஒருமுறை பயன்படுத்தப்படும் ஓ.டி.பி. என்ற ரகசிய குறியீட்டு எண் நடைமுறையை ஏன் பின்பற்றவில்லை என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

இதில் வங்கி வாடிக்கையாளர்களின் வைப்பு தொகையோ, சேமிப்பு தொகையோ மோசடி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பண பரிவர்த்தனை மூலம் கூட்டுறவு வங்கியில் ரூ.60 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com