அரசு அலுவலகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் கொரோனா தடுப்பு அலுவலர் நியமிக்க நடவடிக்கை - கலெக்டர் கண்ணன் தகவல்

முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளபடி அரசு அலுவலகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் கொரோனா தடுப்பு அலுவலர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் கண்ணன் தெரிவித்தார்.
அரசு அலுவலகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் கொரோனா தடுப்பு அலுவலர் நியமிக்க நடவடிக்கை - கலெக்டர் கண்ணன் தகவல்
Published on

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் நிலை குறித்து கலெக்டர் கண்ணனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் 177-ல் இருந்து 24 ஆக குறைந்துவிட்ட நிலையில் மருத்துவ பரிசோதனைகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. தற்போது நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மட்டும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இதனால் தினசரி 5 ஆயிரம் வரை எடுக்கப்பட்டு வந்த மருத்துவ பரிசோதனை தற்போது 3 ஆயிரமாக குறைந்துள்ளது. மருத்துவ பரிசோதனை முடிவுகளை விரைந்து வெளியிட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் மாநில சுகாதாரத்துறை தினசரி வெளியிடும் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கையில் முரண்பாடு ஏற்படுவதற்கு பட்டியல் விவரங்கள் தயாரிப்பதில் ஏற்படும் தாமதமே காரணம் ஆகும். மேலும் சில தனியார் மருத்துவ பரிசோதனை மையங்கள் பரிசோதனை முடிவுகளை மாநில சுகாதாரத்துறைக்கு நேரடியாக அனுப்பி வைப்பதால், மாவட்ட சுகாதாரத்துறைக்கு அந்த விவரங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் விவரங்களை மாவட்ட சுகாதாரத்துறை தெரிவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

முதல்-அமைச்சர் 100 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளித்துள்ள நிலையில் அனைத்து அரசு அலுவலகங்களிலும், தொழில் நிறுவனங்களிலும் கொரோனா தடுப்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். தொழில் நிறுவனங்களில் கொரோனா பாதிப்பு ஏற்படுவதை கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

அதன்படி மாவட்டம் முழுவதும் அனைத்து துறை அரசு அலுவலகங்களிலும், தொழில் நிறுவனங்களிலும் கொரோனா தடுப்பு அலுவலர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 4-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சேவை சங்கங்கள் 50-க்கும் குறைவானவர்களை கொண்டு கூட்டங்கள் நடத்த தடை இல்லை.

வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து வழிபாடு நடத்த வேண்டும் எனகேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் நோய் தொற்றை முற்றிலுமாக கட்டுப்படுத்த மாவட்ட மக்கள், மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com