மருத்துவ குழுவினர் ஆய்வு

கம்பம் அரசு மருத்துவமனைக்கு ‘காயகல்ப்’ விருது வழங்குவதற்கு மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர்.
மருத்துவ குழுவினர் ஆய்வு
Published on

கம்பம்:

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காணப்படும் உள்கட்டமைப்பு வசதிகள், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், குறைபாடுகள், சுற்றுப்புற சுகாதாரம், மருத்துவமனையின் தேவைகள் குறித்து காயகல்ப் விருது வழங்குவதற்கு மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்து மதிப்பெண்கள் அளித்து வருகின்றனர். இந்த குழுவினர் அளிக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் அரசு மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது.

அதன்படி தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் காயகல்ப் விருது வழங்குவதற்காக ஊட்டி அரசு மருத்துவமனை டாக்டர் சுப்பிரமணியன் தலைமையிலான டாக்டர்களும், ஊத்தாங்கரை மற்றும் பண்ருட்டி அரசு மருத்துவமனைகளை சேர்ந்த டாக்டர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது கம்பம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் பொன்னரசன் உடன் இருந்தார்.

மருத்துவமனையில் குழந்தைகள் பிரசவ வார்டு, உள்நோயாளிகள் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, பிரேத பரிசோதனைக் கூடம், உணவு தயாரிக்கும் கூடம், சலவை அறை, தண்ணீர் தொட்டி, மருத்துவ கழிவுகளை கையாளும் முறை, பதிவேடுகள் கையாளும்முறை, சுகாதாரம் மற்றும் எலி, நாய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.

பின்னர் சித்த மருத்துவப் பிரிவின் மூலிகைத் தோட்டத்துக்கு சென்று அங்கு வளர்க்கப்படும் 50-க்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள் குறித்து விசாரித்தனர். இதுகுறித்து மருத்துவ அலுவலர் கூறுகையில், கம்பம் அரசு மருத்துவமனை கடந்த 2019-ம் ஆண்டு காயகல்ப் விருது பெற்றது. அதனை தொடர்ந்து 2 ஆண்டுகள் கொரோனா தொற்றின் காரணமாக விருதுக்கான ஆய்வுகள் நடத்தப்படவில்லை, இந்த ஆண்டு காயகல்ப் விருதுக்கான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com