சூரம்பட்டியில் சாலை அமைக்கக்கோரி மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்ட வியாபாரிகள்

ஈரோடு சூரம்பட்டியில் சாலை அமைக்கக்கோரி மாநகராட்சி அதிகாரிகளை வியாபாரிகள் முற்றுகையிட்டனர். இன்று (செவ்வாய்க்கிழமை) கடையடைப்பு நடத்தவும் வியாபாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
சூரம்பட்டியில் சாலை அமைக்கக்கோரி மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்ட வியாபாரிகள்
Published on

ஈரோடு,

ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் இருந்து சூரம்பட்டி வலசு வரை பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இதற்காக சாலையில் குழிகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டன. இந்த பணிகள் நிறைவடைந்த பிறகு புதிய தார் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் சாலைகள் குண்டும், குழியுமாக மாறின. வாகனங்கள் அந்த வழியாக சென்று வரும்போது புழுதி பறக்கின்றன. எனவே புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என்று சூரம்பட்டியை சேர்ந்த வியாபாரிகள் ஒன்று திரண்டு ஊர்வலமாக சென்று மாநகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால் அங்கு சாலை அமைக்கப்படவில்லை.

இந்த நிலையில் புதிதாக சாலை அமைக்கக்கோரி வியாபாரிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதற்காக நோட்டீஸ் அடித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு வினியோகம் செய்தனர். மேலும், ஆட்டோக்கள், கடைகள், பஸ்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டன.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு மாநகராட்சி உதவி ஆணையாளர்கள் அசோக்குமார், விஜயா ஆகியோர் நேற்று மாலை சூரம்பட்டி பகுதிக்கு சென்றனர். அங்கு வியாபாரிகளை சந்தித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது வியாபாரிகள் அதிகாரிகளை சூழ்ந்தபடி முற்றுகையிட்டு சாலையை உடனடியாக அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:

சூரம்பட்டி நால் ரோட்டில் இருந்து சூரம்பட்டி வலசு வரை தார் சாலை அமைக்க வேண்டும் என்று கடந்த 2 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 6 மாதங்களுக்கு ஒரு முறை மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தோம். அப்போது மண், ஜல்லி கற்களை கொண்டு சாலை செப்பனிடப்பட்டது. ஆனால் தார் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் வாகனங்கள் செல்லும்போது புழுதி பறக்கின்றன. எனவே எங்கள் பகுதியில் உடனடியாக தார் சாலை அமைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அதிகாரிகள் பதில் அளித்தபோது கூறுகையில், சூரம்பட்டி நால்ரோடு முதல் ஜெகநாதன் காலனி வரை உள்ள சாலை மாநகராட்சிக்கு சொந்தமானது. ஜெகநாதன் காலனியில் இருந்து சூரம்பட்டி வலசு வரை உள்ள சாலை நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது. ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான சாலையில் புதிய தார் சாலை அமைக்க ரூ.1 கோடியே 40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. எனவே ஒப்பந்தம் விட்டபிறகு சாலை உடனடியாக அமைக்கப்படும். இதேபோல் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலை அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான பணிகளும் விரைவில் தொடங்கும், என்றனர். அதன்பின்னர் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சாலையை பார்வையிட சென்றனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, சூரம்பட்டி பகுதியில் சாலை அமைக்க வேண்டும். மேலும், புழுதி பறக்காத வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி எங்களுடைய கடையடைப்பு போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும். மேலும், சாலை மறியலிலும் ஈடுபட உள்ளோம், என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com