மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில், யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் தொடங்கியது - 26 யானைகள் உற்சாகத்துடன் பங்கேற்பு

மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் தொடங்கியது. இதில் 26 யானைகள் உற்சாகத்துடன் பங்கேற்றன.
மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில், யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் தொடங்கியது - 26 யானைகள் உற்சாகத்துடன் பங்கேற்பு
Published on

மேட்டுப்பாளையம்,

தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களை சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. முதுமலை தெப்பக்காட்டில் கடந்த 4 ஆண்டுகளும், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் கோவில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் கடந்த 7 ஆண்டுகளும் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் நடந்தது.

இதை தொடர்ந்து 12-வது ஆண்டாக யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் நேற்று தொடங்கியது. இதற்காக நேற்று முன்தினம் தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களை சேர்ந்த 26 யானைகள் முகாம் நடக்கும் இடத்துக்கு லாரிகளில் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டன.

முகாம் தொடக்க விழாவை முன்னிட்டு நேற்று காலையில் யானைகள் அனைத்தையும் பாகன்கள் குளிப்பாட்டி, நெற்றிப்பட்டம் கட்டி, அலங்கரித்து வரிசையாக நிறுத்தி வைத்தனர். அப்போது வரிசைய நின்ற யானைகள் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தன. முகாம் தொடங்குவதற்கு முன்பு பவானி ஆற்றின் கரையோரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் கணபதி ஹோமம் நடைபெற்றது.

பின்னர் யானைகளுக்கு வழங்குவதற்காக கரும்பு, சர்க்கரை, ஆப்பிள், வாழைப்பழம் மற்றும் சத்து டானிக் ஆகியவை வாளிகளில் வைக்கப்பட்டு இருந்தன. முகாமை தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் வரிசையில் அணிவகுத்து நின்ற யானைகளுக்கு கரும்பு, தர்ப்பூசணி, ஆப்பிள், வாழைப்பழம் ஆகியவற்றை வழங்கினார். அதன் பின்னர் பணீந்திர ரெட்டி மற்றும் அதிகாரிகள் முகாமில் உள்ள உணவுக்கூடம், சமையல் கூடம், யானைகளுக்கு வழங்குவதற்காக சமைத்து வைக்கப்பட்டு இருந்த உணவுகள், ஊட்டச்சத்து மருந்து, மாத்திரைகளை பார்வையிட்டனர்.

முகாமில் கலந்து கொண்ட யானைகள் உற்சாகத்துடன் காணப்பட்டன. சில யானைகள் சக யானைகளை கண்ட மகிழ்ச்சியில் துதிக்கையால் அவற்றை அணைத்துக்கொண்டன. சில யானைகள் உற்சாக மிகுதியில் திளைத்தவாறு மண்ணை தலையில் போட்டபடி இருந்தன.

தொடக்க விழாவையொட்டி முகாமுக்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் ஒரே இடத்தில் ஏராளமான யானைகளை பார்வையிட்டு மகிழ்ந்தனர். அத்துடன் சிலர் தங்கள் செல்போன்களால் யானைகளை வீடியோவும், புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர். மேலும் செல்பியும் எடுத்து மகிழ்ந்தனர். இந்த முகாம் அடுத்த மாதம் (ஜனவரி) 31-ந் தேதி வரை நடக்கிறது.

முகாமில் யானைகள் புத்துணர்ச்சியுடன் இருப்பதற்காக ஊட்டச்சத்து உணவுகள், மூலிகை குளியல், ஆயுர்வேத மருந்துகள், பசுந்தீவனங்கள் ஆகியவை வழங்கப்படுகிறது. இதில் பங்கேற்று உள்ள யானைகளுக்கு காலை மற்றும் மாலை என்று 2 வேளைகளிலும் மொத்தம் 10 கி.மீ. தூரத்துக்கு நடைபயிற்சி அளிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com