எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: முன்னேற்பாடு பணிகள் குறித்து முதல்-அமைச்சர் நேரில் ஆய்வு

சேலத்தில் நாளை நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மேடை அமைக்கும் பணி உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை நேரில் ஆய்வு செய்தார். இதையொட்டி பாதுகாப்பு பணிக்காக 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: முன்னேற்பாடு பணிகள் குறித்து முதல்-அமைச்சர் நேரில் ஆய்வு
Published on

சேலம்,

சேலம் கருப்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நாளை (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு தமிழக சட்டசபை சபாநாயகர் ப.தனபால் தலைமை தாங்குகிறார். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளையும், 30 ஆயிரத்து 372 பயனாளிகளுக்கு ரூ.495 கோடியே 21 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசுகிறார்.

மேலும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்காக மேடை, பந்தல் அமைக்கும் பணிகள், அலங்கார வளைவு, பார்வையாளர்கள் அமரும் இடம், பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை நேற்று மாலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது? என்பது குறித்து கலெக்டர் ரோகிணியிடம் கேட்டறிந்தார். பின்னர், அவர் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

முதல்-அமைச்சரின் சொந்த மாவட்டமான சேலத்தில் விழா நடைபெறுவதால் மற்ற ஊர்களை காட்டிலும் விழா சிறப்பாக அமைய வேண்டும் என்றும், அதற்கான முன்னேற்பாடு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

அப்போது, உணவுத்துறை அமைச்சர் காமராஜ், சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், எம்.எல்.ஏ.க்கள் ஜி.வெங்கடாசலம், வெற்றிவேல் உள்பட அரசுத்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

இதையொட்டி கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார் தலைமையில் 6 ஐ.ஜி.க்கள், 10 டி.ஐ.ஜி.க்கள், 20 மாவட்டங்களை சேர்ந்த போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோர் சேலத்தில் முகாமிட்டு பாதுகாப்பு பணியை மேற்பார்வை செய்து வருகிறார்கள். இதுதவிர, 60 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 250 இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் என சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, விழுப்புரம், கரூர், திண்டுக்கல், திருப்பூர், கோவை உள்பட 20 மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விழா நடைபெறும் மேடை மற்றும் மாநகர் முழுவதும் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

நூற்றாண்டு விழா நடைபெறும் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் இருந்து சேலம் மாநகர் வரையிலும் சாலையின் இருபுறமும் கட்சி கொடிகளும், வரவேற்பு பேனர்களும் வைக்கப்பட்டுள்ளது. மேலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களும் ஆங்காங்கே வைக்கப்பட்டு சேலம் மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com