

சுல்தான்பேட்டை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சுல்தான்பேட்டை ஒன்றிய பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. மேலும் அதை சார்ந்த உப தொழிலாக கறவை மாடு வளர்ப்பு விளங்குகிறது. இங்கு நாட்டு மாடுகள் உள்பட பல்வேறு இன மாடுகள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ளன. கறவை மாடு வளர்ப்பில் முக்கியமானது ஆண்டு முழுவதும் தீவன பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தீவன பற்றாக்குறை ஏற்பட்டால், பால் உற்பத்தி குறைந்து விடும்.
இந்த நிலையில் சுல்தான்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வருவதால், தரிசு நிலங்கள் மற்றும் தோட்டங்களில் இயற்கையாக வளரும் புற்கள் உள்ளிட்ட பசுந்தீவனங்கள் வளர்வதில்லை. இதனால் கறவை மாடுகள் விரும்பி உண்ணும் பசுந்தீவனங்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது.
இதன் காரணமாக பால் உற்பத்தி குறைந்து வருகிறது. இதனால் கறவை மாடுகளை வளர்த்து வரும் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்து உள்ளனர். சிலர் தங்களது தோட்டங்களில் புற்கள் உள்ளிட்ட பசுந்தீவனங்களை வளர்த்து பற்றாக்குறையை போக்கி வருகின்றனர். இதுகுறித்து சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-
கடந்த சில ஆண்டுகளாக நிலவும் மாறுபட்ட காலநிலையால் பயிர் சாகுபடியில் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். இந்த ஆண்டும் முன்னதாகவே சுட்டெரிக்கும் கோடை கடும் வெயில் காரணமாக பசுந்தீவன பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதனால் இதுவரை தினமும் 10 லிட்டர் பால் கறந்து வந்த மாடு, தற்போது 8 லிட்டர் மட்டுமே கறக்கிறது.
இதன் பாதிப்பில் இருந்து மீள சில விவசாயிகள் பசுந்தீவன உற்பத்தியை பயிர் சாகுபடி போலவே மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இதில் மலைபுல் கால்நடைகளின் பசுந்தீவன தேவையை ஈடு செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த வகை புல் செழித்து வளர அதிக குளிர்ச்சியும், ஈரப்பதமும் தேவை. இதனால் சுழலும் தெளிப்பு நீர் பாசனம் அமைத்து விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இதன் மூலம் கோடைகாலத்தில் ஓரளவுக்கு பசுந்தீவன தேவையை சமாளிக்க முடிகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.