

கன்னியாகுமரி,
போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், சுற்றுச்சூழல் தூய்மையை பாதுகாக்க வேண்டியும் குமரி சமூக விடியல் இயக்கம் சார்பில் நேற்று கன்னியாகுமரியில் இருந்து தென்தாமரைகுளம் வரை மினி மாரத்தான் போட்டி நடந்தது.
இதன் தொடக்க நிகழ்ச்சி காமராஜர் மணிமண்டபம் முன்பு நடந்தது. நிகழ்ச்சிக்கு வக்கீல் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. முகமது இஸ்மாயில், அகஸ்தீஸ்வரம் வட்டார மதசார்பற்ற ஜனதாதள தலைவர் தியாகராஜன், ஆர்.எஸ். பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போட்டி 15 வயதுக்கு உள்பட்ட ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாகவும், 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக என 4 பிரிவுகளில் நடந்தது. ஆண்கள் பிரிவுகளுக்கான போட்டியை சென்னை முன்னாள் மேயரும், மனித நேய ஐ.ஏ.எஸ். அகாடமி நிறுவனருமான சைதை துரைசாமி தொடங்கி வைத்தார்.
பெண்களுக்கான போட்டி
பெண்களுக்கான போட்டியை துணை போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால் தொடங்கி வைத்தார். தென்தாமரைகுளம் தூய பனிமயமாதா ஆலய பங்குத்தந்தை ராஜன், திரைப்பட இயக்குனர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாரத்தான் ஓட்டம் விவேகானந்தபுரம், அகஸ்தீஸ்வரம், புவியூர், காட்டுவிளை வழியாக தென்தாமரைகுளத்தை சென்றடைந்தது. அங்கு நடந்த விழாவில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.