ராகுல் காந்திக்கு மந்திரி சுதிர் முங்கண்டிவார் கண்டனம்

தலித் சிறுவர்கள் தாக்கப்படும் வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சுதிர் முங்கண்டிவார் கண்டனம் தெரிவித்தார்.
ராகுல் காந்திக்கு மந்திரி சுதிர் முங்கண்டிவார் கண்டனம்
Published on

மும்பை,

ஜல்காவ் மாவட்டம் வகாடி கிராமத்தை சேர்ந்த தலித் சிறுவர்கள் 2 பேர் அங்கிருந்த உயர் சாதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான கிணற்றில் குளித்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிணற்றின் உரிமையாளர் சிறுவர்கள் 2 பேரையும் தாக்கியதோடு அவர்களை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

இந்த வீடியோ நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே சிறுவர்கள் தாக்கப்படும் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இதற்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதாவின் விஷம் நிறைந்த அரசியலே காரணம் என கடுமையாக விமர்சித்து இருந்தார்.

இந்தநிலையில் மும்பையில் நிருபர்களை சந்தித்த மராட்டிய நிதி மந்திரி சுதிர் முங்கண்டிவார், தலித் சிறுவர்கள் தாக்கப்படும் வீடியோவை ராகுல் காந்தி டுவிட்டரில் பகிர்ந்ததற்கு கண்டனம் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:-

இது போன்ற சம்பவங்களின்போது பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை வெளியிடுவதை தவிர்ப்பது தான் நாட்டின் நடைமுறை. ராகுல் காந்தியோ ஒரு பக்கம் நாட்டின் பிரதமர் ஆக ஆசைப்படுகிறார். ஆனால் மறுபுறம் இதுபோன்ற நடைமுறைகளை புறக்கணிக்கிறார். இந்த வீடியோவை பகிர்ந்ததன் மூலம் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு மேலும் காயத்தையே அவர் ஏற்படுத்தியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com