அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்யக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

குட்கா ஊழல் வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 2 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட 170 பேரை போலீசார் கைது செய்தனர்.
அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்யக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
Published on

புதுக்கோட்டை,

அமைச்சர், டி.ஜி.பி., முன்னாள் போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு எதிரான குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி நேற்று முன் தினம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்நிலையில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஒத்துழைக்கும் வகையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி புதுக்கோட்டை திலகர் திடலில் புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ரகுபதி எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் எம்.எல்.ஏ. மெய்ய நாதன் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர, மாணவரணி, இளைஞரணி, மகளிரணி, வக்கீல் அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குட்கா ஊழல் வழக்கில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோரை ராஜினாமா செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து செல்லபாண்டியன் பேசுகையில், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்படி இதே கோரிக்கையை வலியுறுத்தி நாளை (அதாவது இன்று சனிக்கிழமை) காலை 10 மணியளவில் இலுப்பூரில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொள்ள வேண்டும், என்றார். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த புதுக்கோட்டை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கருணாகரன், வாசுதேவன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரகுபதி எம்.எல்.ஏ. மற்றும் செல்லபாண்டியன் ஆகிய 2 பேரை மட்டும் கைது செய்வதாக கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யுங்கள் என போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் திலகர் திடல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் ரகுபதி, மெய்யநாதன், செல்லப்பாண்டியன் உள்பட 170 பேர் திலகர் திடலில் இருந்து, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பிக்கொண்டு பழனியப்பா கார்னர் வழியாக மேலராஜவீதியில் உள்ள ஒரு மண்டபத்திற்கு ஊர்வலமாக சென்று, அங்கு கைது ஆனார்கள். இதைத் தொடர்ந்து போலீசார் கைது செய்யப்பட்ட 170 பேரையும் அதே மண்டபத்தில் தங்க வைத்து உள்ளனர். இந்த சம்பவத்தால் புதுக்கோட்டையில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com