அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் மாரியப்பன்கென்னடியை வெற்றி பெறச்செய்ய வேண்டும்

மானாமதுரை தொகுதி இடைத்தேர்தலில் மாரியப்பன்கென்னடியை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. பேசினார்.
அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் மாரியப்பன்கென்னடியை வெற்றி பெறச்செய்ய வேண்டும்
Published on

மானாமதுரை,

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மக்கள் சந்திப்பு பயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதே போல் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதிக்கு உட்பட்ட இளையான்குடி ஒன்றியம் கிழாயக்குடி, பெரும்பச்சேரி, இளமனூர் ஆகிய பகுதியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. முன்னதாக பெரும்பசேரி கிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவருடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வும், மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் மாரியப்பன் கென்னடி உடன் இருந்தார். அதன் பின்னார் திறந்த வேனில் நின்று பொதுமக்களிடம் டி.டி.வி. தினகரன்எம்.எல்.ஏ பேசியதாவது:- தற்போது நடைபெற்று வருகிற இந்த ஆட்சி எப்போது முடிவுக்கு வரும் என்று பொதுமக்கள் காத்திருக்கும் நேரம் வந்து விட்டது. வருகிற நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் இந்த மானாமதுரை தொகுதி உட்பட காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் வரும்.

அப்போது இந்த 20 தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெற்று சாதனை படைக்கும். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உங்களால் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த மாரியப்பன்கென்னடி என்ன தவறு செய்தார். ஏன் அவரது பதவி பறிக்கப்பட்டது என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். மாரியப்பன்கென்னடி நன்கு சம்பாதித்து நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்று அவர் நினைத்தால் தற்போது நடக்கும் அரசோடு அவர் இணைந்திருக்கலாம்.

ஆனால் அதை எல்லாம் பெரிதாக அவர் கருதாமல் கழகம் தான் முக்கியம் என்று நமது பக்கம் நின்றதால் இன்று அவர் தனது பதவியை இழந்துள்ளார். எனவே வருகிற இடைத்தேர்தலில் போட்டியிடும் அவரை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் தேர்போகி பாண்டி, மாவட்ட இளைஞர் பாசறை துணைச் செயலாளர் கோதண்டபாணி, மானாமதுரை மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், சிறுபான்மை நலப்பிரிவு மாவட்ட செயலாளர் துருக்கி என்ற ரபிக்ராஜா, இளையான்குடி நகர செயலாளர் உஸ்மான் அலி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com