பா.ஜனதா இருக்கும் வரை மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக முடியாது தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் பேச்சு

பா.ஜனதா இருக்கும் வரை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக முடியாது என தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் கூறினார்.
பா.ஜனதா இருக்கும் வரை மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக முடியாது தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் பேச்சு
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள் பா.ஜனதாவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்ட தலைவர் தர்மலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. நரசிம்மன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் பங்கேற்று பேசினார். அப்போது அவர்பேசியதாவது:- தேசிய குடியுரிமை திருத்த சட்ட மசோதாவினால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லை. அந்த சட்டத்தில் ஒரு வரி கூட முஸ்லிம்களுக்கு எதிரான வார்த்தை இல்லை. பா.ஜனதா கட்சி இருக்கும் வரை மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக முடியாது. தமிழகத்திற்கு மருத்துவ கல்லூரி உள்பட எண்ணற்ற திட்டங்களை மத்திய அரசு வாரி வழங்குகிறது. முஸ்லிம்கள் ஆபத்தில் இருப்பதாக மு.க.ஸ்டாலின் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார். அ.தி.மு.க.பா.ஜ.க.வின் கைப்பாவையாக இருக்கிறது என்கிறார். ஆனால் அவர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கைப்பாவையாக இருக்கிறார். பாகிஸ்தானில் தான் இந்துக்கள் ஆபத்தில் இருக்கிறார்கள். இவ்வாறுஅவர் பேசினார்.

வீரப்பன் மகள்

விழாவின் போது சந்தன கடத்தல் வீரப்பன் மகள் வித்யாராணி, பா.ஜனதா கட்சியில் சேர்ந்தார். அப்போது அவர் கூறியதாவது:- எனது தந்தை அடித்தட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பார். ஆனால் அவர் தவறான பாதைக்கு சென்றுவிட்டார். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் நான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

இதையொட்டி பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய பலர் பா.ஜனதாவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் கட்சி மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் ஹரிகோட்டீஸ்வரன், நகர தலைவர் ரமேஷ், சுரேஷ், ஹரிநாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com