திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை நிறுத்தக்கோரி அதிகாரிகளிடம் கெஞ்சிய மு.க.ஸ்டாலின் அமைச்சர் தகவல்

‘திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை நிறுத்தக்கோரி அதிகாரிகளிடம் மு.க.ஸ்டாலின் கெஞ்சினார்‘ என்றும், இது தொடர்பாக ஆடியோ பதிவு இருக்கிறது என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை நிறுத்தக்கோரி அதிகாரிகளிடம் கெஞ்சிய மு.க.ஸ்டாலின் அமைச்சர் தகவல்
Published on

பழனி,

அ.தி.மு.க. மாவட்ட மாணவர் அணி சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் பழனி ரெயில்வே பீடர் ரோட்டில் மின்வாரிய அலுவலகம் அருகே நடந்தது. இதற்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் அன்வர்தீன் தலைமை தாங்கினார். மாவட்ட மாணவரணி தலைவர் வீரக்குமார், செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். பின்னர் அமைச்சர் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மெழுகுவர்த்தி ஏந்தி மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க அஞ்சலி செலுத்தினர். கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டதால் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி அடைந்துள்ளார். தேர்தலை நிறுத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் அதிகாரிகளிடம் கெஞ்சினார். இதுகுறித்த ஆடியோ பதிவு எங்களிடம் உள்ளது. ஆனால் அவர் இடைத்தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. பயப்படுவதாக பிரசாரம் செய்து வருகிறார். தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அதில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி அ.தி.மு.க. அரசை கலைக்கலாம் என கனவு காணும் மு.க.ஸ்டாலின், டி.டி.வி. தினகரன் ஆகியோரின் திட்டம் பலிக்காது. தினகரனுக்கு சசிகலாவின் உறவினர் என்ற தகுதி மட்டுமே உள்ளது. அதை பயன்படுத்தி அவர் கொள்ளை அடித்த பணத்தை வைத்து தான் தற்போது அவர் அரசியல் நடத்தி வருகிறார்.

இந்தி மொழி எதிர்ப்பு போராட்டத்துக்கு மறைந்த தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி தலைமை தாங்கினார். ஆனால் அவருடைய மகன், மகள், பேரன்கள் என அனைவரும் இந்தி மொழியை பேசுகிறார்கள். மு.க.ஸ்டாலின் வடமாநிலத்துக்கு சென்று பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு இந்தியில் பேசுகிறார்.

எனவே இவர்களுக்கு மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்த எந்த தகுதியும் கிடையாது. ஆனால் தி.மு.க.வினர் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடத்துகிறார்கள். இது வேதனை அளிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், மாவட்ட செயலாளர் மருதராஜ், வேடசந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுப்புரத்தினம், வேணுகோபாலு, நகர செயலாளர் முருகானந்தம், ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி, ஜெயலலிதா பேரவை நகர துணை செயலாளர் ராஜாமுகமது உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பழனி நகர மாணவரணி செயலாளர் செந்தில் ராஜவேல் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com