விளம்பரம் பார்த்தால் வருமானம் கிடைக்கும் எனக்கூறி பொதுமக்களிடம் பண மோசடி; தனியார் நிறுவன இயக்குனர் கைது ரூ.3½ கோடி பறிமுதல்

பெங்களூருவில், விளம்பரத்தை பார்த்தால் வருமானம் கிடைக்கும் எனக்கூறி பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவன இயக்குனர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.3½ கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விளம்பரம் பார்த்தால் வருமானம் கிடைக்கும் எனக்கூறி பொதுமக்களிடம் பண மோசடி; தனியார் நிறுவன இயக்குனர் கைது ரூ.3½ கோடி பறிமுதல்
Published on

பெங்களூரு,

பெங்களூரு பசவேசுவராநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கே.எச்.பி. காலனி, 80 அடி ரோட்டில் ஒரு தனியார் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து முதலீடாக பெற்ற பணத்தை திரும்ப கொடுக்காமலும், ஏராளமானவர்களிடம் பணத்தை வாங்கி மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தது. இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் உத்தரவின் பேரில், அந்த தனியார் நிறுவனத்தில் போலீசார் சோதனை நடத்தினார்கள்.

அந்த நிறுவனத்தில் ஏராளமான ஆவணங்கள் இருந்ததுடன், பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நிறுவனத்தின் இயக்குனரான கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த கே.வி.ஜானி (வயது 54) என்பவரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது பெங்களூருவில் வசித்து வரும் கே.வி.ஜானி, பசவேசுவராநகரில் தனியார் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். இந்த நிறுவனத்தில் ரூ.1,109 செலுத்தி உறுப்பினராகி கொண்டால், அந்த நிறுவனம் வெளியிடும் விளம்பரங்களை தொடர்ந்து பார்க்க முடியும். இதற்காக பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு இருந்த கே.வி.ஜானி, அந்த நிறுவனம் சம்பந்தப்பட்ட விளம்பரங்களை தன்னுடைய நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களை பார்க்கும்படி கூறியுள்ளார்.

இவ்வாறு தினமும் 60 விளம்பரங்களை பார்த்தால், ரூ.240 வீதம் மாதம் ரூ.7,200 தருவதாகவும், ஆண்டுக்கு ரூ.86 ஆயிரத்து 400 தருவதாகவும் கொடுப்பதாக கே.வி.ஜானி கூறி இருந்தார். இதனை நம்பிய பலர் ரூ.1,109 செலுத்தி உறுப்பினராகி, தினமும் விளம்பரங்களை பார்த்து வந்தார்கள். பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும், அவரது நிறுவனத்தில் ரூ.ரூ.1,109 செலுத்தி உறுப்பினராக இருந்தார்கள்.

வ்வாறு உறுப்பினராகும் நபர்கள், தங்களுக்கு கீழ் இந்த நிறுவனத்தில் உறுப்பினராக சேர்த்து விட்டால், அவர்களுக்கு கமிஷன் வழங்கப்படும் என்றும் கே.வி.ஜானி தெரிவித்துள்ளார். அதாவது 10 பேரை உறுப்பினராக சேர்த்து விட்டால் ரூ.4,400 தருவதாகவும், 100 பேரை சேர்த்து விட்டால் ரூ.17,600 தருவதாகவும் பொதுமக்களிடம் கூறி வந்துள்ளார். இதனை நம்பிய பலர் உறுப்பினராகவும், விளம்பரங்களையும் பார்த்து வந்துள்ளனர். ஆனால் பொதுமக்களிடம் இருந்து வசூலித்த பணத்தை திரும்ப கொடுக்காமலும், விளம்பரங்களை பார்க்கும் நபருக்கு பணத்தை கொடுக்காமலும் கே.வி.ஜானி மோசடி செய்தது தெரியவந்தது.

இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள், அவரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்திருந்தது தெரியவந்தது. கைதான கே.வி.ஜானியிடம் இருந்து பொதுமக்களிடம் வசூலித்த ரூ.3 கோடி மற்றும் முக்கிய ஆவணங்களை நிறுவனத்தில் இருந்து பறிமுதல் செய்து போலீசார் எடுத்து சென்றுள்ளனர். கைதான கே.வி.ஜானி மீது பசவேசுவராநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com