பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ராமநாதபுரத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ராமநாதபுரத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு
Published on

பனைக்குளம்,

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடந்தது. கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், கலெக்டர் வீரராகவராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:- தமிழகத்தில் மாறி வருகிற பருவமாற்றத்திற்கேற்ப பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழக அரசால் சிறப்பாக எடுக்கப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்கள் நமக்கு பருவமழைக் காலமாகும். இந்த காலங்களில் நமக்கு கிடைக்கக்கூடிய மழையின் அளவில் 48 சதவீதம் மட்டுமே குடிநீருக்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் ராமநாதபுரத்தில் மழையின் அளவு சராசரியை விட குறைந்து காணப்பட்டது. எனவே, பற்றாக்குறை மழைப்பொழிவை நாம் எதிர்த்து போராடி வறட்சியை சமாளித்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஏற்கனவே பல்வேறு இடங்களில் ஏற்பட்ட பேரிடர்களின் போது சிறப்பாக பணியாற்றியவர்.

ஒவ்வொரு மாவட்டங்களிலும் மிக பாதிப்பு, பாதிப்பு, மிதமான பாதிப்பு மற்றும் பாதிப்பு குறைந்த பகுதிகள் என பிரித்து அலுவலர்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளுக்கும் மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு குழுக்கள் அமைத்து, குழுக்கள் மூலம் உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து அதை ஒரு வரைபடமாக தயாரித்து அதன் மூலம் அந்த பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும். அனுபவத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் புது, புது யுத்திகள் மக்களின் நல்வாழ்விற்கு பயன்படக் கூடியதாக அமைக்கப்பட்டு வருகிறது.

வானிலை எச்சரிக்கையினை நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். சில காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகும்போது வலுவிழக்கவும் செய்யும், வலுப்பெறவும் செய்யும். அவ்வாறு வலுப்பெறும் பட்சத்தில் அதை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும். முழுமையான பேரிடர் தடுப்பு என்பது ஒரு உயிரிழப்பு கூட இல்லாமல் இருப்பதே உண்மையான பேரிடர் தடுப்பு மேலாண்மையாக இருக்கும். இழப்பு ஏற்பட்ட பின்பு நிவாரணம் வழங்குவது மட்டுமல்லாமல், இழப்பே இல்லாமல் இருப்பது தான் உண்மையான பேரிடர் மேலாண்மையாகும். இழப்பே ஏற்படாமல் தடுப்பது, தனிப்பது, குறைப்பது என்பது முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் எண்ணம். அதை தமிழ்நாடு முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.

அனைத்து பகுதிகளிலும் முதல் நிலை பொறுப்பாளர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக தயார் நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு களப்பணிகளை ஆற்றுவதற்கு உள்ளனர் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. முதல் நிலை பொறுப்பாளர்களுக்கு சீருடைகளும் வழங்கப்பட்டு, அவர்களுக்கு முன்னுரிமைகள் வழங்கப்படுவது சிறப்பாக உள்ளது.

அனைத்து முதல்நிலை அரசு அலுவலர்கள் முதல் தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் என அனைவரும் தங்கள் பணிகளை களத்தில் மேற்கொள்வதற்கு அனைத்து விதத்திலும் தங்களை தயார் நிலையிலும், பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். அரசு அலுவலர்கள், பொதுமக்கள் தங்கள் உடைமைகளை இழந்து வாடும் தருவாயில், அவர்களை சமாதானம் அடையச் செய்து அவர்களுக்கு இணக்கமாக ஆறுதல் கூறி மனிதாபிமான அடிப்படையில் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிரதீப்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாஸ், சதன்பிரபாகர், சரவணன் (மதுரை தெற்கு), ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் முனியசாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா, மாநில பனைவெல்ல வாரியத் தலைவர் சேதுபாலசிங்கம், ஆவின் சங்க துணை தலைவர் நாகநாத சேதுபதி, ராமநாதபுரம் தாலுகா வீட்டுவசதி கூட்டுறவு சங்க தலைவர் ஆர்.ஜி.மருதுபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com