பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர்: மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் 31 பேர் கைது

கரூரில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதால் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கின. மறியலிலில் ஈடுபட்டதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் 31 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர்: மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் 31 பேர் கைது
Published on

கரூர்,

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொடக்க பள்ளிகளை உயர்நிலை-மேல்நிலை பள்ளிகளுடன் இணைப்பதை கைவிட வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் கடந்த 22-ந்தேதியிலிருந்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் (ஜாக்டோ-ஜியோ) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளிகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால், மாணவ-மாணவிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். இந்த நிலையில் அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக, தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இது தொடர்பாக கரூரில் இடைநிலை, படடதாரி, பி.எட் முடித்த ஆசிரியர்களிடமிருந்து சுமார் 3 ஆயிரம் விண்ணப்பங்கள் வரபெற்றுள்ளன. மேலும் மறியலில் ஈடுபட்ட 14 ஆசிரியர்கள் மற்றும் ஒரு அரசு ஊழியர் உள்பட 15 பேரை பணியிடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் இனியும் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் எனில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றும் இடம், காலியிடமாக அறிவிக்கப்படும் என அரசு அறிவித்தது.

எனினும் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும் என அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் அறிவித்தனர். அந்த வகையில் நேற்று காலை கரூர் தாலுகா அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அங்கு திரண்டிருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சிலர் திடீரென அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியபடியே வந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட 31 பேரை கைது செய்து வேனில் ஏற்றி கரூரில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். இதைத்தொடர்ந்து 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு சிலர் சென்றனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவித்து கரூர் மாவட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் தாந்தோன்றிமலை அரசு கல்லூரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

கரூரில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட பெரும்பாலான ஆசிரியர்கள் நேற்று வழக்கம் போல் பணிக்கு திரும்பி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை ஏதுவும் எடுக்கப்படவில்லை. கரூர் மாவட்டத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் 2,559 பேரில் நேற்று காலை நிலவரப்படி 2,466 பேர் பணிக்கு திரும்பி விட்டனர். 93 பேர் பணிக்கு வரவில்லை. கரூர் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட கரூர், தாந்தோன்றிமலை, அரவக்குறிச்சி, பரமத்தி வட்டார தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் 1,159 பேர் பணியாற்றுகின்றனர். இதில் 831 பேர் பணிக்கு வந்துள்ளனர். சொந்த காரணத்தினால் 47 பேர் விடுப்பு எடுத்துள்ளனர். 281 பேர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பணிக்கு வரவில்லை. இந்த புள்ளி விவரத்தில் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக பணியாளர்கள் ஆகியோர் அடங்குவர்.

குளித்தலை கல்வி மாவட்டத்திற்குட்பட்ட குளித்தலை, தோகைமலை, கிருஷ்ணராயபுரம், கடவூர் ஆகிய 4 வட்ட பகுதியில் 339 ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் பணிபுரியும் மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 1082. இதில் போராட்டத்தில் பங்கேற்று நேற்று முன்தினம் வரை பள்ளிக்கு வராமல் இருந்தவர்கள் 492 பேர். இந்தநிலையில் நேற்று 471 பேர் பணிக்கு திரும்பினர். இதையடுத்து அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. இக்கல்வி மாவட்டத்தில் தற்போதுவரை 21 ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமல் உள்ளனர். இவர்கள்மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று (நேற்று) மதியம் நிலவரப்படி கரூர் மாவட்டத்தில் 85 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு வந்து விட்டனர். தொடர்ந்து பலரும் போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். வராதவர்கள் மீது 17-பி பிரிவில் துறைரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தங்கவேல் தெரிவித்தார்.

மேலும் கரூரை பொறுத்தவரையில் 25 பள்ளிகளும், குளித்தலை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளும் ஆசிரியர்கள் பணிக்கு வராததன் காரணமாக இயக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் கல்வித்துறை வட்டாரத்தில் விசாரித்த போது தெரிய வந்தது. இதனால் அந்த இடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com