ஈரோட்டில் பெரும்பாலான கடைகள் திறப்பு: வாகனங்கள் வழக்கம்போல் ஓடின

ஈரோட்டில் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன. வாகனங்கள் வழக்கம்போல் ஓடின.
ஈரோட்டில் பெரும்பாலான கடைகள் திறப்பு: வாகனங்கள் வழக்கம்போல் ஓடின
Published on

ஈரோடு,

கொரோனா ஊரடங்கு வருகிற 17-ந் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே தமிழ்நாட்டில் 34 வகையான தொழில் நிறுவனங்கள், கடைகள் இயங்கும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி நேற்று கடைகள் திறக்கப்பட்டன.

ஈரோட்டை பொறுத்தவரை ஜவுளிக்கடைகள் அதிக அளவில் உள்ளன. ஆனால் ஊரகப்பகுதிகளில் மட்டுமே ஜவுளிக்கடைகள் திறக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருப்பதால் ஈரோடு மாநகர் பகுதியில் ஜவுளிக்கடைகள் திறக்கவில்லை. குளிர்சாதன வசதி உள்ள கடைகளும் திறக்க தடை இருப்பதால் அவையும் திறக்கப்படவில்லை. மற்றபடி பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன. ஈரோடு புது மஜீத் வீதி, கொங்கலம்மன் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டன. ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு ஆகிய பகுதிகளில் ஒரு சில ஜவுளிக்கடைகள் திறக்கப்பட்டு இருந்தன.

டீக்கடைகளும் திறந்து இருந்தன. ஆனால், வழக்கமாக வந்து குடிப்பதுபோன்று டீ குடிக்க முடியாது என்பதால் கடைகளில் கூட்டம் இல்லை. ஆஸ்பத்திரிகள், கடைகளில் இருந்து பார்சல் டீ வாங்க வருபவர்கள் மட்டுமே வந்தனர். இதனால் டீக்கடைகள் வெறிச்சோடியே இருந்தன.

ஒரு சில அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் தவிர்த்து மற்ற கடைகள் திறந்து இருந்தாலும் விற்பனை இல்லாமல் உரிமையாளர்கள் பொதுமக்களை எதிர்பார்த்து காத்து இருந்தனர். ஆனால் வழக்கத்தைவிட வாகனங்கள் அதிகமாக சென்றன. பயணிகள் பஸ், வாடகைக்கார், வாடகை ஆட்டோ தவிர்த்து மற்ற வாகனங்கள் சென்றன.

போக்குவரத்தை கட்டுப்படுத்த ஏற்கனவே போலீசார் ஏற்படுத்திய தடுப்பு வேலிகள் அப்படியே ஆங்காங்கே உள்ளன. இதனால் அந்த பகுதியில் சற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் இருந்தனர். பொதுமக்கள் தடையின்றி வாகனங்களிலும், நடந்தும் சென்றனர்.

இந்த நிலையில் மேலும் சிறிய அளவிலான கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டு உள்ளது. இதுபற்றி வியாபாரி ஒருவர் கூறும்போது, சிறிய அளவிலான ஜவுளிக்கடைகளை ஊரகப்பகுதிகளில் திறக்க அரசு அனுமதி அளித்து உள்ளது. ஆனால், நகர்ப்பகுதிகளில் திறக்க அனுமதிக்கவில்லை. இது சிறிய வியாபாரிகளுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 2 மாதமாக கடைகளுக்கு வாடகை செலுத்த வேண்டும். குடும்பம் நடத்த வேண்டும். தொழிலுக்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்று பல பிரச்சினைகள் உள்ளன. இந்தநிலையில் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் சிறிய ஜவுளிக்கடைகளையும் திறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும். அதில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொள்ள அறிவுறுத்தலாம்.

சிறு வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com