

தூத்துக்குடி,
தூத்துக்குடி சத்யா நகரை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மனைவி சமுத்திரக்கனி. இவர்களுக்கு பாஸ்கர்(வயது 23) என்ற மகன், ஒரு மகள். இதில், மகளுக்கு திருமணமாகி கணவருடன் வெளியூரில் வசித்து வருகிறார். பாஸ்கர் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செல்வம் இறந்து விட்டார். கணவர் இறந்து விட்டதை தொடர்ந்து சமுத்திரக்கனி வீட்டு வேலைகள் செய்து வந்தார். இந்த நிலையில் நெருங்கிய உறவினரிடம் சமுத்திரக்கனி கடன் வாங்கி உள்ளார். அந்த கடனை திருப்பி கொடுக்க முடியாமல் சமுத்திரக்கனி சிரமப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அந்த கடனை திருப்பி கொடுக்க தனக்கு உதவுமாறு பாஸ்கரிடம், சமுத்திரக்கனி கேட்டுள்ளார். அதற்கு அவ்வளவு தொகை தன்னிடம் இல்லை என பாஸ்கர் கூறியுள்ளார்.
தூக்குப்போட்டு தற்கொலை
கணவரும் இல்லை, மகனுக்கும் தனக்கு உதவ முடியவில்லை. அதே நேரத்தில் உறவினரிடம் வாங்கிய கடனையும் தன்னால் திருப்பி செலுத்த முடியவில்லையே என மனம் உடைந்த சமுத்திரக்கனி உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
ஏற்கனவே தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த பாஸ்கர், தனது ஒரே உறவான தாயையும் பறிகொடுத்து விட்டதால் மனமுடைந்து காணப்பட்டார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த பாஸ்கர், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்த தகவலின் பேரில், தூத்துக்குடி தென்பாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பாஸ்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.