பாலியல் வழக்கில் முகிலனுக்கு மதுரை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது

பாலியல் வழக்கில் முகிலனுக்கு மதுரை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
பாலியல் வழக்கில் முகிலனுக்கு மதுரை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது
Published on

மதுரை,

ஈரோடு மாவட்டம், சென்னிமலையைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் முகிலன் மீது, பெண் ஒருவர் கடந்த மார்ச் மாதம் பாலியல் புகார் செய்தார். அதன்பேரில் குளித்தலை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே கடந்த பிப்ரவரி மாதம் மாயமான முகிலனை கடந்த ஜூலை மாதம் திருப்பதி ரெயில் நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். பாலியல் வழக்கில் ஜாமீன் கேட்டு, மதுரை ஐகோர்ட்டில் முகிலன், மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாநில அரசு வக்கீல் நடராஜன், குற்ற வழக்குகளுக்கான அரசு வக்கீல் ராபின்சன் ஆகியோர் ஆஜராகி, மனுதாரர் முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஜூலை வரை மாயமான சமயத்தில் அவரை தமிழக போலீசார் தான் கடத்தி, என்கவுண்ட்டரில் கொன்றது போல மாயையை ஏற்படுத்தியிருந்தார். அவர் மீதான பாலியல் வழக்கின் விசாரணை முடிந்து, இறுதி அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர் வெளியில் வந்தால் மீண்டும் மாயமாக வாய்ப்புள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதாடினார்கள்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருந்ததாவது:-

மாயமானதாக கூறப்பட்ட நாட்களில் மனுதாரர் முகிலன் எங்கிருந்தார் என்ற கேள்விக்கு அவர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சென்னையில் இருந்து மதுரைக்கு ரெயிலில் வரும்போது செங்கல்பட்டுவில் சிலர் தன்னை கடத்தி ஜார்கண்ட் மாநிலத்துக்கு கொண்டு சென்றதாகவும், பின்னர் அங்கிருந்து தப்பித்து ரெயிலில் வந்தபோது ஆந்திர போலீசார் மடக்கியதாகவும் கூறியுள்ளார்.

இது சேவல்-காளை கதையை போல உள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் காது குத்தும் நிகழ்ச்சி நடத்தப்படும். இதற்கு காது குத்தல் என்று பெயர். மனுதாரரின் பதில் மனுவையும் இதுபோல தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மகாபாரதத்தில் போரின்போது மன்மத வியூகத்தை பயன்படுத்தி அபிமன்யுவை சிக்க வைத்தது போல மனுதாரரின் நிலையும் உள்ளது.

இருந்தபோதும் அவர், ஜல்லிக்கட்டு போராட்டம், ஸ்டெர்லைட், நெடுவாசல், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை, அவர் கரூர் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தில் 2 நாட்களுக்கு ஒருமுறை காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com