

மும்பை,
மும்பை தாராவி வல்லப்சொசைட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமணி (வயது62). டிரைவர். இவர் கோடை விடுமுறையையொட்டி சொந்த ஊரான நெல்லை மாவட்டம் பரப்பாடி அருகே உள்ள காந்தவாடி கிராமத்திற்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். இவர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் நேற்று முன்தினம் நாகர்கோவில்- மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலில் மும்பை புறப்பட்டார். இவர்கள் எஸ்-6 பெட்டியில் பயணம் செய்தனர்.
பயணத்தின் போது குடும்பத்தில் உள்ள பெண்கள் அனைவரும் தங்களது நகைகளை கழற்றி ஒரு பையில் வைத்திருந்தனர்.
ரெயில் இரவு அனந்தபூர்-குண்டக்கல் இடையே வந்த போது மர்மஆசாமி ஒருவர் பையில் வைத்திருந்த ரூ.30 ஆயிரம், 60 பவுன் தங்கநகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றார். இந்தநிலையில் அதிகாலையில் கண் விழித்த கிருஷ்ணமணியின் மனைவி பை பிளேடால் கிழிக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதனால் பதறி போன அவரது குடும்பத்தினர் உடனே சம்பவம் குறித்து டிக்கெட் பரிசோதகரிடம் புகார் அளித்தனர். மேலும் உடனிருந்த சமூக ஆர்வலர் ஒருவர் ரெயில்வே மந்திரி பியூஷ் கோயலுக்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்தார்.
இந்தநிலையில் ரெயில் மும்பை வந்தவுடன் பாதிக்கப்பட்டவர்கள் ரெயில்வே போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.