100 நாள் வேலை வழங்க வேண்டும் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பெண்கள் மனு

100 நாள் வேலை வழங்க வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் பெண்கள் மனு அளித்தனர்.
100 நாள் வேலை வழங்க வேண்டும் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பெண்கள் மனு
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நடந்தது. கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்களிடம் இருந்தும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்தும் பல்வேறு கோரிக்கை மனுக்களை கலெக்டர் கந்தசாமி நேரில் பெற்றுக்கொண்டார்.

இதில் கல்வி உதவித்தொகை, வங்கிக்கடன் உதவி, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலை வாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.

பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும் நிலுவையிலுள்ள மனுக்களின் மீதான தொடர் நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

கூட்டத்தில் போளூர் தாலுகா திண்டிவனம் கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில் 100 நாள் வேலை திட்டத்திற்கு 1,200-க்கும் மேற்பட்ட பெண்கள் பதிவு செய்து உள்ளனர். எங்களுக்கு வேறு வேலை வாய்ப்பும், வருமானமும் இல்லை. எனவே, எங்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்றனர்.

துரிஞ்சாபுரம் ஒன்றியம் சீலப்பந்தல் பிச்சனந்தல் காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில், எங்கள் பகுதியில் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்திற்கு இடுகாட்டுச்சாலை மற்றும் எரிமேடை இல்லாததால் சடலத்தை எடுத்துச்செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. எனவே, எங்கள் பகுதியில் இடுகாட்டுச்சாலை மற்றும் எரிமேடை அமைத்து தர வேண்டும் என்றனர்.

திருவண்ணாமலை ஒன்றியம் மேல்கச்சிராப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் கொடுத்துள்ள மனுவில், மேல்கச்சிராப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் 25 மாணவர்கள் 8-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு செல்கின்றனர். பின்னர் அவர்கள் திருவண்ணாமலையில் உள்ள பள்ளிகளில் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். அந்த மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி இல்லாததால் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பஸ் பிடித்து பள்ளிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே, மாணவர்களின் நலனில் அக்கறைக்கொண்டு மாணவர்களுக்கு பஸ் வசதி செய்துதர வேண்டும் என்றனர்.

செங்கம் தாலுகா பரமனந்தல் கிராமத்தை சேர்ந்த அம்பேத்கர் நகர் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வந்து அளித்த மனுவில், எங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. குடிநீருக்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. அதை சிலர் கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கி குடிநீர் வழங்க விடமால் தடுத்து வருகின்றனர். எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com