

மைசூரு,
மைசூரு, மண்டியா, குடகு மாவட்டங்களுக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது. அதனால் அங்குள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோடை காலம்...
கோடை காலம் என்றாலே குதூகலம்தான். ஏன் என்றால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு விடுமுறை ஆகும். அதனால் ஏராளமானோர் கோடை காலத்தில் குடும்பத்துடன் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்று பொழுதைக் கழித்து மகிழ்வார்கள். குறிப்பாக குளிர்ச்சியான இடங்களைத் தேடியும், சுற்றுலா தலங்களை தேடியும் சென்று பொதுமக்கள் குவிவார்கள். அப்படி பொழுதைக் கழிக்க ஏற்ற இடங்களில் மைசூரு, மண்டியா, குடகு உள்ளிட்ட இடங்களும் அடங்கும்.
குறிப்பாக மைசூருவில் உள்ள திப்பு சுல்தான் அரண்மனை, மிருகக்காட்சி சாலை, சாமுண்டி மலை, நஞ்சன்கூடுவில் உள்ள ஸ்ரீகண்டேஷ்வரர் கோவில், வரலாற்றில் இடம்பெற்ற தலகாடு கோவில்கள், மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் திப்பு சுல்தான் ஆட்சி புரிந்த மற்றும் அவர் மறைந்த இடங்கள் ரங்கநாதசாமி கோவில், கே.ஆர்.எஸ். அணை, பிருந்தாவன் பூங்கா, குடகு மாவட்டத்தில் துபாரே யானைகள் முகாம், மடிகேரி, நாகரஒலே, தலக்காவிரி, இறுப்பு நீர்வீழ்ச்சி, அப்பி நீர்வீழ்ச்சி உள்பட பல்வேறு சுற்றுலா இடங்கள் உள்ளன.
போக்குவரத்து நெரிசல்
தற்போது கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் மைசூரு, குடகு, மண்டியா மாவட்டங்களுக்கு சுற்றுலா பயணிகள் வந்து குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். அதனால் மைசூரு உள்பட பல்வேறு இடங்களில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள் நிரம்பி வழிகின்றன. வாடகைக் கார்கள், வேன்கள் அனைத்தும் போக்கு வரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.
மைசூருவில் மிருகக்காட்சி சாலை, சாமுண்டீஸ்வரி மலையில் அதிக அளவில் மக்கள் குவிவதால் அங்கு தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அங்கு கூடுதல் போக்குவரத்து போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
வியாபாரிகள் மகிழ்ச்சி
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் வியாபாரிகளும் உற்சாகம் அடைந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் கலைநயம் மிக்க பொருட்களை அதிக அளவில் விரும்பி வாங்குவதால், அந்த பொருட்களை தயாரித்து விற்பதில் வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதுமட்டுமல்லாமல் புதிய, புதிய ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் உருவாகி இருக்கின்றன. வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த மைசூரு, குடகு, மண்டியா மாவட்ட வியாபாரிகள் தற்போது சுற்றுலா பயணிகளின் வருகையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.