நாலச்சோப்ராவில் சிறுமியின் தலையில் புகுந்த ஆணி அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

நாலச்சோப்ராவில் சிறுமியின் தலையில் புகுந்த ஆணியை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றினர்.
நாலச்சோப்ராவில் சிறுமியின் தலையில் புகுந்த ஆணி அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்
Published on

வசாய்,

பால்கர் மாவட்டம் நாலச்சோப்ரா நாகின்தாஸ் பாடா பகுதியில் புதிய அடுக்குமாடி கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. சம்பவத்தன்று காலை அதே பகுதியை சேர்ந்த சாந்தினி என்ற 12 வயது சிறுமி கட்டுமான பணி நடக்கும் அந்த வழியாக கடைக்கு சாக்லெட் வாங்க நடந்து சென்று கொண்டிருந்தாள். அப்போது கட்டிடத்தில் இருந்து கான்கிரீட் துண்டு ஒன்று தவறி சிறுமியின் தலையில் விழுந்தது. இதில், அதில் இருந்த ஆணி சாந்தினியின் நெற்றி பகுதியில் தலையில் புகுந்தது.

இதனால் அவள் வலி தாங்க முடியாமல் சரிந்தாள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவளை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் 4.5 செ.மீ. நீளம் கொண்ட ஆணி சிறுமியின் மண்டை ஓட்டை துளைத்து கொண்டு மூளை வரை 9 மி.மீட்டர் அளவுக்கு புகுந்து இருந்தது தெரியவந்தது. உடனடியாக டாக்டர்கள் குழுவினர் சிறுமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு டாக்டர்கள் அந்த ஆணியை அவளது தலையில் இருந்து வெற்றிகரமாக அப்புறப்படுத்தினார்கள்.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் சிறுமி நலமுடன் இருப்பதாக தெரிவித்த டாக்டர்கள், ஒரு மாதத்துக்கு பிறகு அவளுக்கு மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதாக தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com