நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க.-காங்கிரஸ் வேட்பாளர்கள் உள்பட 37 பேர் மனு தாக்கல்

நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்கள் உள்பட 37 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க.-காங்கிரஸ் வேட்பாளர்கள் உள்பட 37 பேர் மனு தாக்கல்
Published on

நாங்குநேரி,

நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வருகிற 21-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 23-ந்தேதி தொடங்கியது. நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான நடேசன் வேட்புமனுக்களை பெற்றார்.

நேற்று முன்தினம் வரை மொத்தம் 9 வேட்பாளர்கள் 12 மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். வேட்புமனு தாக்கலுக்கு இறுதிநாளான நேற்று ஒரே நாளில் மட்டும் 28 வேட்பாளர்கள் 34 மனுக்களை தாக்கல் செய்தனர். இதன் மூலம் நாங்குநேரி சட்டசபை தொகுதியில் மொத்தம் 37 வேட்பாளர்கள் 46 மனுக்களை தாக்கல் செய்து உள்ளனர்.

அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக பெருமாள் மனுதாக்கல் செய்தார். காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரனும், மாற்று வேட்பாளராக அவருடைய மகன் அசோக்கும் மனுதாக்கல் செய்தனர். நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜநாராயணன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதுதவிர சுயேச்சை வேட்பாளர்களாக ஜெயக்குமார் ஜார்ஜ், சேகர், இந்துராணி, செல்லப்பாண்டியன், நாகராஜன், மகாராஜா பிரவீன், நாகூர் மீரான், எஸ்.முருகன், மகாராஜன், நெல்லை ஆனந்தன், மனோகரன், சுதாகர் பாலாஜி, எம்.முருகன், லிங்கபெருமாள், ஆர்.முருகன், சகாயராஜ், இசக்கிவேல், பாலமுருகன், நம்பிராஜன், ராஜூ, முகமது சித்திக், கந்தசாமி சந்தானகுமார், ஜெகதீசன் ஆகியோரும் மனுதாக்கல் செய்தனர்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கடைசிநாள் ஆகும். அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com