எல்லை பகுதியில் தடைகளை நீக்க உத்தரவு நாராயணசாமி தகவல்

புதுச்சேரி எல்லை பகுதியில் தடைகளை நீக்க உத்தரவிட்டுள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
எல்லை பகுதியில் தடைகளை நீக்க உத்தரவு நாராயணசாமி தகவல்
Published on

புதுச்சேரி,

புதுச்சேரியில் தமிழக பகுதிகள் மாறி மாறி வருகின்றன. கட்டுப்படுத்தப்பட்ட பகுதியான கோட்டகுப்பத்தை சேர்ந்த மக்களை நாம் தடுத்து நிறுத்துவது சரியாக இருக்காது. நமது எல்லை பகுதியில் உள்ள மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கவும், மருத்துவ பரிசோதனைக்கும் வருகின்றனர். எனவே அவர்களை புதுச்சேரிக்கு அனுமதிப்பதற்கான தடைகளை நீக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நாம் வெளியே செல்வதை அவர்கள் தடுத்தால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. புதுவை அரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டு செயல்படுகிறது. இதேபோல் ஜிப்மரில் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவை செயல்பட அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளேன். ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்பு முன்புபோல் கடைகளில் கூட்டம் இல்லை என்றபோதிலும் காய்கறி, மளிகை கடைகளை மதியம் 12 மணி வரையிலும் மற்ற கடைகளை காலை 10 மணிக்கு மேல் குறிப்பிட்ட நேரம் வரை திறந்து வைக்கலாம் என்று சில ஆலோசனைகளை கூறியுள்ளனர். ஓரிரு நாட்களில் இந்த நேர மாற்றம் தொடர்பாக முடிவு செய்வோம்.

85 சதவீத மக்கள் ஒத்துழைப்பு

தமிழக பகுதியில் இருந்து புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு அனுமதி சீட்டு தேவையில்லை. இதற்காக வருபவர் களுடன் உதவிக்கு ஒருவர் வரலாம். கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு செப்டம்பர் மாதம் வரை இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். மனித பாதுகாப்பு போல் நமக்கு பொருளாதார வளர்ச்சியும் தேவை.

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. எனவே புதுவை பகுதியை பாதுகாக்கும் பொறுப்பும் நமக்கு உள்ளது. இப்போது 85 சதவீத மக்கள் அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தருகிறார்கள்.

மதுக்கடை திறப்பு

தமிழகத்தில் தற்போது மது கடைகள் திறக்கப்பட்டுள்ளன. நமது மாநிலம் பாரம்பரியமாக மதுக்கடை உள்ள மாநிலம். ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகளை திறந்து உள்ளார்கள். நாங்களும் மதுக்கடை உரிமையாளர்களுடன் இது தொடர்பாக பேசி உள்ளோம். மதுக்கடைகளை எப்போது திறப்பது என்பது குறித்து விரைவில் அமைச்சரவையை கூட்டி முடிவு செய்வோம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com