தேசிய அளவிலான மல்லர்கம்பம் போட்டி

விழுப்புரத்தில் நடந்த தேசிய அளவிலான நடைபெற்ற மல்லர்கம்பம் போட்டியில் 20 மாநிலங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.
தேசிய அளவிலான மல்லர்கம்பம் போட்டி
Published on

விழுப்புரம்,

தமிழ்நாடு மல்லர்கம்பம் கழகம் சார்பில் தேசிய மல்லர்கம்பம் போட்டி விழுப்புரத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த போட்டிக்கு தமிழ்நாடு மல்லர்கம்பம் கழக நிறுவனர் உலக.துரை தலைமை தாங்கினார். தேசிய மல்லர்கம்பம் சம்மேளன பொதுச்செயலாளர் குரேடே, பொருளாளர் திலிப் காவானே ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மல்லர்கம்பம் கழக பொதுச்செயலாளர் துரை.செந்தில்குமார், பொருளாளர் ராமச்சந்திரன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். போட்டியை தமிழ்நாடு மல்லர்கம்பம் கழக புரவலர் டாக்டர் பொன்.கவுதமசிகாமணி தொடங்கி வைத்தார். தேசியக்கொடியை விழுப்புரம் ஜான்டூயி பள்ளியின் முதன்மை நிர்வாகி எமர்சன்ராபினும், தேசிய மல்லர்கம்பம் கொடியை சம்மேளனத்தின் தலைவர் ரமேஷ் இந்தோலியாவும், தமிழ்நாடு மல்லர்கம்பம் கொடியை விழுப்புரம் சுழற்சங்க தலைவர் தங்க.கணேசகந்தனும் ஏற்றி வைத்தனர். மல்லர்கம்பம் காணொலி காட்சியை மாவட்ட ஜிம்னாஸ்டிக் கழக தலைவர் அசோக்குமார் சோர்டியா திறந்து வைத்தார்.

இந்த போட்டி 12, 14 வயதுக்குட்பட்டோர் என தனித்தனி பிரிவுகளாகவும், இது தவிர குழுப்போட்டியாகவும் நடத்தப்பட்டது. மாணவர்களுக்கு மல்லர்கம்பம் ஏறும் போட்டியும், மாணவிகளுக்கு மல்லர் கயிறு ஏறும் போட்டியும் நடத்தப்பட்டது.

இந்த போட்டியில் தமிழகம் மட்டுமின்றி மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 20 மாநிலங்களை சேர்ந்த 280 மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு உடலை வில்லாக வளைத்து மல்லர் கம்பத்தில் ஏறியும், மல்லர் கயிற்றில் அந்தரத்தில் தொங்கியபடியும் சாகசங்களை செய்து தங்களது திறமைகளை நிரூபித்தனர். இது தவிர குழு போட்டியிலும் பங்கேற்று மல்லர்கம்பத்தில் பிரமீடு போன்று நின்று அசத்தினார்கள்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவில் பொன்முடி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு தனி நபர் போட்டியில் ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கும் மற்றும் குழு போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த அணியினருக்கும் சுழற்கோப்பை, சான்றிதழ் வழங்கி பாராட்டினார். விழாவில் தமிழ்நாடு மல்லர்கம்பம் தலைவர் மேகநாதன், துணைத்தலைவர்கள் மாதவ.சின்ராஜ், ஆதம்.சாக்ரட்டிஸ், கூடுதல் செயலாளர் ஜனார்த்தனன், விழுப்புரம் வணிகர் சங்க தலைவர் ரமேஷ், மாவட்ட மல்லர்கம்பம் தலைவர் ஜனகராஜ், ஜான்டூயி கல்விக்குழும தலைவர் வீரதாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com