

ஆலங்குளம்,
ஆலங்குளத்தில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு ஏராளமான தனியார் மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மக்கள் இந்த மினி பஸ்களில் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆலங்குளத்தில் இருந்து மாயமான்குறிச்சி கிராமத்திற்கு நேற்று காலை8.30 மணியளவில் மினிபஸ் புறப்பட்டு சென்றது. மினி பஸ்சை காத்தபுரத்தை சேர்ந்த அருள்ராஜ்(வயது27) என்பவர் ஓட்டினார். மினி பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
ஆலங்குளம் அருகே தனியார் மாவுமில் அருகே மினி பஸ் சென்றபோது, எதிரே லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த லாரிக்கு வழிவிடுவதற்காக மினி பஸ்சை டிரைவர் சாலை ஓரமாக ஒதுக்கினார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையோர பள்ளத்தில் மினிபஸ் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதனால் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி பயணிகள் கூச்சலிட்டனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் திரண்டு சென்று இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் ஆலங்குளம் போலீசார் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் காயமடைந்த மினி பஸ் கண்டக்டர் நல்லூர் பால்ராஜ், ஆலங்குளம் அருள்ராஜ் (30), நாரணாபுரம் சுப்பம்மாள் (65), வள்ளியம்மாள் (75), செல்வி (40), சக்திவேல் (62), சுரேஷ் (23), வான்மதி (23), வித்யா (19), நித்யா (18), மாதவன் (15), மாயமான்குறிச்சி மாரியம்மாள் (70), இசக்கியம்மாள், பழனியம்மாள் (42), சோமசுந்திரம் (74), முருகன் (46), சுப்பையாபிள்ளை, மகேந்திரகுமார், கவுசல்யா, ரோகிணி, சண்முகபுரம் ஸ்டெல்லா, மகேஸ்வரி, சந்தியா, ஜீவிதா, ரோஷன், கவிதா, இசக்கிமுத்து, அனுசியா, ரதிகலா, வின்சென்ட்ராஜ் உள்பட 36 பேர் படுகாயம் அடைந்தனர். அனைவரும் ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 16 பேர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி பஸ் டிரைவர் அருள்ராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.