புவனகிரி அருகே வாய்க்கால் தூர்வாராததால் விளைநிலத்தில் பாய்ந்த மழைநீர் பயிர்கள் அழுகுவதால் விவசாயிகள் கவலை

புவனகிரி அருகே வடிகால் வாய்க்கால் தூர்வாராததால் விளைநிலத்திற்குள் மழைநீர் பாய்ந்தது. இதனால் பயிர்கள் அழுகுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
புவனகிரி அருகே வாய்க்கால் தூர்வாராததால் விளைநிலத்தில் பாய்ந்த மழைநீர் பயிர்கள் அழுகுவதால் விவசாயிகள் கவலை
Published on

புவனகிரி,

கடலூர் மாவட்டம் முழுவதும் கடந்த 2 வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. மேலும் பல இடங்களில் விளைநிலங்களில் தேங்கிய மழைநீர் வடியாததால், சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் அனைத்தும் அழுகி வருகின்றன. அந்த வகையில் புவனகிரி பகுதியில் பெய்த மழையால் சுமார் 300 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. அதுபற்றிய விவரம் வருமாறு:-

புவனகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து மழைக்காலங்களில் சித்தேரி கிராமத்தில் உள்ள வடிகால் வாய்க்காலான முரட்டு வாய்க்கால் வழியாக மழைநீர் வெளியேற்றப்படுகிறது. இந்த நிலையில் வடிகால் வாய்க்காலை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், தூர்ந்து போய் வாய்க்கால் இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு ஆகாயத்தாமரைகள் அடர்ந்து வளர்ந்துள்ளன.

இதனால் மழைக்காலங்களில் கிராம பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர், வடிகால் வாய்க்காலில் வடிந்து செல்ல வழியின்றி அருகில் உள்ள வயல்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து விடுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் சித்தேரி மற்றும் சுற்று வட்டார பகுதி விவசாயிகள் சம்பா நடவு செய்து பராமரித்து வந்தனர்.

இதற்கிடையே கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் சித்தேரி வடிகால் வாய்க்காலில் மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி விளைநிலத்திற்குள் புகுந்தது. இதனால் சுமார் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் மழைநீரில் மூழ்கின. இதன் காரணமாக வயல்களில் பயிர்கள் தெரியாத அளவிற்கு தண்ணீர் கடல்போல் காட்சி அளிக்கிறது. வயல்களில் மழைநீர் தேங்கி 4 நாட்களுக்கு மேல் ஆகியும், அதனை வடிய வைக்க முடியாததால், பயிர்கள் அனைத்தும் அழுகி வருகிறது.

இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், சித்தேரியில் உள்ள வடிகால் வாய்க்காலில் ஆகாயத்தாமரைகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. மேலும் அந்த வாய்க்கால் தூர்ந்து போய் உள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஒவ்வொரு வருடமும் மழைக்காலங்களில் விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்களை நாசம் செய்து விடுகிறது. எனவே இனியாவது இந்த முரட்டு வாய்க்காலில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி, முறையாக தூர்வாரி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com