செங்கம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட சென்ற வாலிபர் கைது 3 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்

செங்கம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட சென்ற வாலிபரை வனத்துறையினர் கைது செய்தனர். 3 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
செங்கம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட சென்ற வாலிபர் கைது 3 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்
Published on

செங்கம்,

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பர்வதமலை காப்புக்காட்டில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டுத் துப்பாக்கிகளுடன் சிலர் செல்வதாக மாவட்ட வன அலுவலருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து மாவட்ட வன அலுவலரின் உத்தரவின்பேரில் புதுப்பாளையம் வனச்சரகர் மாதேஸ்வரன் தலைமையில் பருவதமலை காப்புக்காட்டில் வனத்துறையினர் முருகன், சந்திரசேகரன், மதியழகன், ஆதவன் ஆகியோர் ரோந்து சென்றனர்.

அப்போது ஜமுனாமரத்தூர் அடுத்த கோட்டக்கரை கிராமத்தை சேர்ந்த கேசவன் (வயது 30) என்பவர் தனது கூட்டாளிகள் 3 பேருடன் நாட்டுஅ. துப்பாக்கிகளை வைத்து கொண்டு வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக சென்று கொண்டிருந்தார்.

வனத்துறையினரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அதில் கேசவனை மட்டும் வனத்துறையினரிடம் மடக்கி பிடித்தனர். மற்றவர்கள் அவர்களிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கிகளையும், அரிவாளையும் கீழே போட்டு விட்டு தப்பியோடி விட்டனர்.

இதையடுத்து வனத்துறையினர் கேசவனை கைது செய்தனர். மேலும் 3 நாட்டுத்துப்பாகிகள், ஒரு அரிவாள் ஆகியவற்றை பறிமுதல் செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com