கூடலூர் அருகே மண் சரிவில் சிக்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

கூடலூர் அருகே மண் சரிவில் சிக்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கூடலூர் அருகே மண் சரிவில் சிக்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்
Published on

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக 20 செ.மீட்டருக்கு மேல் மழை அளவு பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டு கேரள மாநிலம் வயநாடு, மலப்புரம், திருச்சூர் உள்பட 11 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேரழிவு உண்டானது. இதே தாக்கம் கூடலூரிலும் இருந்தது. இந்த ஆண்டு வழக்கம்போல் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை சரிவர பெய்யவில்லை.

இந்த நிலையில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. இதனால் கேரள மாநிலத்திலும் பலத்த மழை பெய்து மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. இதில் பலர் உயிரிழந்து உள்ளனர். இதேபோல் நீலகிரி மாவட்டத்திலும் மண் சரிவு, மழை வெள்ள பாதிப்பில் சிக்கி 6 பேர் உயிரிழந்து உள்ளனர்.

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லமலை கிராமத்தை சேர்ந்தவர் அபு மகன் சைனூதீன்(வயது 47). கூலி தொழிலாளி. இவர் கடந்த 8-ந் தேதி பார்வுட் பகுதியில் இருந்து தனது நண்பர்கள் சிலருடன் எல்லமலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. சீப்புரம் பகுதியில் சென்றபோது, இடதுபுறம் மேடான இடத்தில் இருந்து பயங்கர சத்தத்துடன் மண் சரிவு ஏற்பட்டது.

இதை கண்ட சைனூதீன் மற்றும் அவரது நண்பர்கள் தப்பி ஓடினர். ஆனால் மண் சரிவில் சைனூதீன் சிக்கினார். மேலும் அசுர வேகத்தில் சேறு, சகதி மற்றும் வெள்ளம் ஓடியது. கண்ணிமைக்கும் நேரத்தில் மரங்களையும் அடித்து நொறுக்கியது.

தங்கள் கண் எதிரே நண்பன் சைனூதீன் மண் சரிவில் சிக்கி காணாமல் போனதை கண்ட சக நண்பர்கள் கூச்சலிட்டனர். இதை தொடர்ந்து சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து கிராம மக்களும் ஓடி வந்தனர். ஆனால் சுமார் 500 அடி உயரத்துக்கு மண் சரிவு ஏற்பட்டு மண்ணுக்குள் புதைந்த தொழிலாளி சைனூதீனை கிராம மக்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் தகவல் அறிந்த வருவாய் துறையினர் அப்பகுதிக்கு வந்தனர்.

பலத்த மழை தொடர்ந்து பெய்து வந்ததால் மீண்டும் மண் சரிவு ஏற்படலாம் என்ற அச்சம் இருந்தது. நேற்று முன்தினமும் சைனூதீனை தேடும் பணி நடைபெற்றது. கிராம மக்களின் உதவியுடன் ராணுவ வீரர்களும் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் எந்த தடயங்களும் கிடைக்கவில்லை. இதனால் கிராம மக்களிடையே சோகம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக காணாமல் போன சைனூதீனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. இதற்காக பொக்லைன் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு வருவாய், தீயணைப்பு படையினர் மற்றும் கிராம மக்கள் இணைந்து பள்ளத்தாக்கான பகுதியில் நிறைந்து இருந்த மண் குவியலை தோண்டி தேடினர். இருப்பினும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து மழை பெய்து வருவதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, மண் சரிவு ஏற்பட்டு 20 மீட்டர் உயரத்துக்கு சேறும், சகதியும் கொண்ட மண் குவியலில் தொழிலாளியை தேடுவது கடினமாக உள்ளது.

எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com