கும்மிடிப்பூண்டி அருகே அம்மன் கோவில் வளாகத்தில் புதிதாக வைக்கப்பட்ட சாமி சிலைகள்

கும்மிடிப்பூண்டி அருகே அம்மன் கோவில் வளாகத்தில் திடீரென 3 சாமி சிலைகள் வைக்கப்பட்டிருந்தது. நள்ளிரவில் சிலைகளை வைத்து யாரேனும் ரகசிய பூஜை செய்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி அருகே அம்மன் கோவில் வளாகத்தில் புதிதாக வைக்கப்பட்ட சாமி சிலைகள்
Published on

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த தேவம்பேடு அருகே உமிப்பேடு கிராமத்தில் பழமை வாய்ந்த கங்கையம்மன் கோவில் உள்ளது. நேற்று கோவில் பூசாரி நித்யானந்தன் (வயது 40) என்பவர் வழக்கம் போல் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் வளாகத்தையொட்டி உள்ள பலி பீடத்தில் அடி உயரத்தில் முனீஸ்வரர், விநாயகர் மற்றும் நாகத்தம்மன் ஆகிய 3 சாமி சிலைகள் புதிதாக வைக்கப்பட்டு இருந்தது. மேற்கண்ட சிலைகளுக்கு பூ போட்டு அர்ச்சனை செய்திருப்பதையும் காணமுடிந்தது.

இது குறித்த தகவலை பூசாரி நித்யானந்தன் கிராம பெரியவர்களிடம் தெரிவித்தார். வேறு எங்கோ உள்ள கோவிலில் இருந்து திருடி கொண்டு வரப்பட்ட சிலைகளை யாராவது இரவில் வைத்து சென்றார்களா? அல்லது அந்த பகுதியில் சிலைகளை வைத்து ரகசிய பூஜையை யாரேனும் நடத்தினார்களா? அப்படி என்றால் அவ்வாறு பூஜை நடத்தியவர்கள் யார்? எதற்காக இந்த பூஜை நடத்தப்பட்டது? என கிராம மக்கள் மனதில் அச்சம் ஏற்பட்டது.

இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் குணசீலன் தலைமையிலான போலீசார் நேரில் வந்து, சிலைகளை வைத்து யாரேனும் ரகசிய பூஜை நடத்தினார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.

அப்போது போலீசாரிடம் கிராம மக்கள், மேற்கண்ட 3 சிலைகளை திடீரென நள்ளிரவில் யாரோ இங்கு வைத்து விட்டு சென்றது கோவில் ஆகம விதிப்படி நல்லது அல்ல என்றும் இவற்றை அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்து உள்ளதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து மேற்கண்ட சிலைகள் அனைத்தும் கிராம நிர்வாக அதிகாரி பூபாலன் மற்றும் கிராம உதவியாளர் பாபு ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com