இளையான்குடி அருகே குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகளை அறையில் வைத்து பூட்டியதால் பரபரப்பு; பெண்கள் உள்பட 20 பேர் மீது வழக்கு

இளையான்குடி அருகே நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகளை சிறை பிடித்து அலுவலகத்தின் உள்ளே வைத்து பூட்டி சென்றனர். இதுதொடர்பாக பெண்கள் உள்பட 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இளையான்குடி அருகே குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகளை அறையில் வைத்து பூட்டியதால் பரபரப்பு; பெண்கள் உள்பட 20 பேர் மீது வழக்கு
Published on

இளையான்குடி,

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ஆழிமதுரை கிராமம் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன. இந்த நிலையில் இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் அந்த பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.

அதன்படி ஆழிமதுரை ஊராட்சி மன்ற கட்டிடத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அதில் துணை தாசில்தார் விஜயக்குமார், வருவாய் ஆய்வாளர் பார்த்திபன், கிராம நிர்வாக அலுவலர் சுகன்யா, கிராம உதவியாளர்கள் ரோகினி, சாகீர் உசேன், மீனாட்சி உள்ளிட்டோர் கலந்துகொண்டு, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தனர்.

அப்போது முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மலைச்சாமி என்பவரின் தலைமையில் வந்தவர்கள், அதிகாரிகளுடன் கோரிக்கைகளை வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகளை சிறைபிடித்து, அலுவலகத்தின் உள்ளே வைத்து பூட்டி விட்டு வெளியில் நின்று போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் பாலகுரு, துணை தாசில்தார் பால கிருஷ்ணன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் ஆகியோர் விரைந்து வந்தனர். பூட்டப்பட்ட அலுவலகத்தை திறந்து உள்ளே சென்று அதிகாரிகளை மீட்டு வெளியில் கொண்டு வந்தனர்.

அதிகாரிகள் கிராம மக்களிடம் சமரச பேச்சு நடத்தினர். அப்போது, மயானம் செல்லும் பாதையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படாததால் நாங்கள் அவதியடைந்து வருகிறோம். இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், வேறு எந்த மனுக்களும் வாங்கக்கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிகாரிகளிடம் கூறினர். இதையடுத்து அதிகாரிகள் மாவட்ட நிர்வாக அனுமதியுடன் கிராம மக்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்றனர்.

இதற்கிடையே அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கிராம நிர்வாக அலுவலர் சுகன்யா, இளையான்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மலைச்சாமி, பாண்டியன், ரவிச்சந்திரன், கர்ணன், வள்ளி, போதும்பொண்ணு மற்றும் சில பெண்கள் உள்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு அவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com