களக்காடு அருகே தோட்டத்தில் காட்டு யானை அட்டகாசம் வாழைகள் நாசம்

களக்காடு அருகே தோட்டத்தில் காட்டு யானை புகுந்தது. அங்கு பயிரிடப்பட்டு இருந்த வாழைகளை நாசப்படுத்தியது.
களக்காடு அருகே தோட்டத்தில் காட்டு யானை அட்டகாசம் வாழைகள் நாசம்
Published on

களக்காடு,

களக்காடு நாடார் புதுத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 56) விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம், களக்காடு அருகே தலையணை மலையடிவாரத்தில் உள்ள கீறிப்பிள்ளைவிளையில் உள்ளது. இதில் அவர் ஏத்தன் ரக வாழைகளை பயிரிட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது தோட்டத்துக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்தது.

அங்கு குலைதள்ளிய நிலையில் இருந்த சுமார் 70 வாழைகளை மிதித்து நாசப்படுத்தியது. மேலும் வாழைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு போடப்பட்டு இருந்த குழாய்களை மிதித்து உடைத்துள்ளது. இதனால் அவருக்கு ரூ.20 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் அன்வர்தீன், களக்காடு துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் ஆகியோர் உத்தரவின்படி களக்காடு வனச்சரக அலுவலர் புகழேந்தி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் சேதமடைந்த வாழைகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். இதுகுறித்து வனச்சரக அலுவலர் புகழேந்தி கூறுகையில், சபரிமலை சீசன் முடிந்ததும் அங்கிருந்து இடம்பெயர்ந்து வரும் யானைகள் இந்த பகுதியில் அதிகளவில் காணப்படும். எனவே இரவு நேரங்களில் தனிப்படை அமைத்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதுவரை யானைகள் விவசாய நிலங்களில் அட்டகாசம் செய்யவில்லை. தற்போது தலையணை மலையடிவாரத்தில் புகுந்துள்ள ஒற்றை யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளோம். மேலும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படும். நாசமான வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com