காரைக்கால் அருகே குளம் வெட்டியபோது சாமி சிலைகள் கண்டெடுப்பு

காரைக்கால் அருகே குளம்வெட்டியபோது உலோகத்தால் ஆன கிருஷ்ணர், பெருமாள் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
காரைக்கால் அருகே குளம் வெட்டியபோது சாமி சிலைகள் கண்டெடுப்பு
Published on

காரைக்கால்,

காரைக்கால் மாவட்டம் சேத்தூர் கிராமத்தில் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 4.5 ஏக்கர் நிலத்தில் மகளிர் சுயஉதவிக்குழு சார்பில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கப்படுகிறது. இதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் பண்ணை குளம் வெட்டும் பணி நேற்று நடைபெற்றது.

மாலை 3.30 மணியளவில் குளத்துக்காக 2 அடி ஆழம் பள்ளம் தோண்டியபோது, உலோகத்தினால் ஆன பொருள் இருப்பது போன்ற சத்தம் கேட்டது. உடனே பொக்லைன் எந்திர டிரைவர், பள்ளம் தோண்டும் பணியை நிறுத்தினார். பின்னர் வேலையாட்கள் மூலம் அந்த இடத்தை தோண்டி பார்த்தபோது, சுமார் 1 அடி உயரத்தில் கிருஷ்ணர் மற்றும் பெருமாள் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.

இதுபற்றிய தகவல் அப்பகுதியில் காட்டுத்தீயாக பரவியது. கிராம மக்கள் அங்கு திரண்டு வந்து சிலைகளை பார்த்தனர். தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அதிகாரி தயாளன் மற்றும் ஊழியர்கள் சேத்தூர் கிராமத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் சிலைகளை கைப்பற்றி எடுத்துச்சென்று, மாவட்ட துணை கலெக்டர் ஆதர்சிடம் ஒப்படைத்தனர்.

இந்த சிலைகள் ஐம்பொன்னால் ஆனது என்று கிராம மக்களால் கூறப்படுகிறது. இருப்பினும் முறைப்படி ஆய்வு நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு துணை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

குளம் வெட்டும் பகுதியில் முனீஸ்வரனை வைத்து வணங்கி வருவதால், அங்கு குளம் வெட்டக்கூடாது என்று ஒரு தரப்பு மக்கள் கடந்த சில நாட்களுக்கு முன் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது குளம் வெட்டும் பணியின்போது சாமி சிலைகள் கிடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com