கொடைரோடு அருகே, ஆம்னி பஸ் கவிழ்ந்து மருத்துவ மாணவி சாவு - தம்பதி உள்பட 20 பேர் படுகாயம்

கொடைரோடு அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து மருத்துவ மாணவி பரிதாபமாக இறந்தார். தம்பதி உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
கொடைரோடு அருகே, ஆம்னி பஸ் கவிழ்ந்து மருத்துவ மாணவி சாவு - தம்பதி உள்பட 20 பேர் படுகாயம்
Published on

கொடைரோடு,

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து மதுரைக்கு தனியார் ஆம்னி பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை பல்லடத்தை சேர்ந்த கோவிந்தசாமி (வயது 49) என்பவர் ஓட்டினார். அந்த பஸ்சில் 25-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். நேற்று அதிகாலை திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுங்கசாவடி அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடியது.

பின்னர் 4 வழிச்சாலையின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையின் மீது மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் பஸ் சுக்குநூறாக நொறுங்கியது. பஸ்சின் முன்பக்க சக்கரங்கள் கழன்று ஓடின. இதில் இடிபாடுகளில் சிக்கி பயணிகள் கூச்சல் போட்டனர்.

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த சாலக்குடியை சேர்ந்த அருண்பியாஸ் மகள் மரியஜோஸ் (26) படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இவர் மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.டி. படிப்பு படித்து வந்தார்.

மேலும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த ஜோதிமாணிக்கம் (33), அவருடைய மனைவி தேவி (22), ராஜாசிங் (24), சுவாமிநாதன் (50), ரவீந்திரன் (69), செந்தில்குமார், சுரேஷ் (54), எர்ணாகுளத்தை சேர்ந்த சித்தின் நெல்சன் (36), சுஜித் (36), ஜெனிப்பன் தாமஸ் (26), சரத்பிள்ளை (35), சுதிர்பாபு (45), பிஜித் (44), டேசிங்ஜாயி (26), கென்னிமோன் (37), ஜாஸ்கன் (35), ஆனந்த் பிலிப்குமார் (26) உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் படுகாயம் அடைந்த தேவி கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமார், அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா மற்றும் ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்களின் உதவியுடன் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மரியஜோசின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து காரணமாக திண்டுக்கல்- மதுரை 4 வழிச்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com