மானூர் அருகே தங்கம் எனக்கூறி செம்புக்காசுகளை விற்ற 2 பேர் கைது ரூ.90 ஆயிரம் மீட்பு

மானூர் அருகே தங்கம் எனக்கூறி செம்புக்காசுகளை விற்று மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.90 ஆயிரம் மீட்கப்பட்டது.
மானூர் அருகே தங்கம் எனக்கூறி செம்புக்காசுகளை விற்ற 2 பேர் கைது ரூ.90 ஆயிரம் மீட்பு
Published on

மானூர்,

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள மாவடி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). இவர் நெல்லையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். மாவடியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆணும், பெண்ணுமாக குடும்பத்தோடு தங்கியிருந்தனர். இவர்கள் தங்கியிருந்த இடத்தின் அருகே உள்ள வீட்டுக்காரரான சுரேசிடம், 2 பேர் பேச்சுக் கொடுத்தனர். கஜா புயலின்போது ஒரு புதையல் கிடைத்ததாகவும், அதில் ஒரு கிராம் எடையுள்ள ஏராளமான தங்க காசுகள் இருந்ததாகவும் கூறியுள்ளனர். ஒரு காசு 1500 ரூபாய்க்கு தருவதாகவும், வேண்டுமென்றால் சோதனை செய்து பாருங்கள் எனக்கூறி ஒரு தங்க காசை கொடுத்துள்ளனர்.சுரேஷ் அந்த தங்க காசை தங்களுடன் வேலை செய்யும் பலரிடம் காண்பித்து, உரசிப்பார்த்து அது சுத்தமான தங்கம் என தெரிந்ததும், அவர்களிடம் இருந்த 125 தங்க காசுகளையும் பெற்றுக்கொண்டு, தனது மற்றும் தங்கையின் நகைகளை வங்கியில் அடகு வைத்து ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார். சற்று நேரத்தில் அந்த மோசடி கும்பல் அங்கிருந்து சென்று விட்டது. பின்னர் சுரேஷ் மற்ற காசுகளையும் சோதனை செய்தபோது அவை அனைத்தும் செம்புக்காசுகள் என தெரிந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுரேஷ் இதுபற்றி மானூர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர்கள் மாடசாமி, புதியவன் மற்றும் போலீசார் ரத்தினவேலு, சூசை தேவசகாயம் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி, திண்டிவனம் அருகே உள்ள சந்தைமேடு கிராமத்தை சேர்ந்த ஜெகன் (30), திண்டிவனம் அருகே உள்ள வல்லம் கிராமத்தை சேர்ந்த ராமு (55) ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.90 ஆயிரத்தை மீட்டனர். இவர்கள் மேலும் இதுபோன்று வேறு யாரிடமாவது மோசடி செய்துள்ளனரா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com