மயிலாடுதுறை அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் 3-வது நாளாக கைது - இடையூறுகளை தாண்டி பிரசாரம் தொடரும் என பேட்டி

மயிலாடுதுறை அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் 3-வது நாளாக கைது செய்யப்பட்டார். இடையூறுகளை தாண்டி பிரசார பயணம் தொடரும் என அவர் பேட்டி அளித்துள்ளார்.
மயிலாடுதுறை அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் 3-வது நாளாக கைது - இடையூறுகளை தாண்டி பிரசாரம் தொடரும் என பேட்டி
Published on

குத்தாலம்,

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் அடுத்த ஆண்டு (2021) நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை நாகை மாவட்டம் திருக்குவளையில் கடந்த 20-ந் தேதி தொடங்கினார். அங்கு பிரசாரம் தொடங்கிய சிறிது நேரத்தில் போலீசார் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தி.மு.க. நிர்வாகிகளை கைது செய்தனர்.

பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் உள்பட பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்ட அவர் நேற்று முன்தினம் 2-வது நாளாக நாகையில் பிரசாரத்தை தொடர்ந்தார்.

நாகையில் அவரை போலீசார் தடுத்து நிறுத்தி 2-வது முறையாக கைது செய்து அங்கு ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் போலீசார் அவரை விடுவித்தனர்.

2-வது நாள் பிரசாரத்திலும் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு மயிலாடுதுறையில் மாணவ- மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். நேற்று 3-வது நாளாக மயிலாடுதுறை பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தை மேற்கொண்டார். நேற்று அவருடைய பிரசார பயணம் மயிலாடுதுறை அருகே உள்ள திருவெண்காட்டில் இருந்து தொடங்கியது.

மதியம் 1.30 மணி அளவில் நாகை மாவட்டம் குத்தாலம் கடைவீதிக்கு பிரசாரம் செய்ய வந்தார். இதையொட்டி அங்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்திருந்தனர். தஞ்சை சரக டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா தலைமையில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். கலவர தடுப்பு வாகனமும் நிறுத்தப்பட்டு இருந்தது.

குத்தாலத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், வருகிற 2021 சட்டசபை தேர்தலில் தி.மு.க. ஆட்சி அமைய இளைஞர்கள் களப்பணி செய்ய வேண்டும். தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ளன. எனவே கட்சியினர் அனைவரும் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்து, தி.மு.க. ஆட்சி அமைவதற்கு பாடுபட வேண்டும். சென்னையில் அமித்ஷா கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்த எடப்பாடி பழனிசாமி அரசு என்னுடைய நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்து, கைது நடவடிக்கையில் ஈடுபடுகிறது. 2021-ல் தி.மு.க. ஆட்சி அமைய சூளுரை ஏற்போம் என்றார்.

தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட இருந்த நிலையில் அவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ய முயன்றனர். ஆனால் அங்கு திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது உதயநிதி ஸ்டாலின், போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார். அதன் பின்னர் போலீசார் உதயநிதி ஸ்டாலினை கைது செய்தனர். கொரோனா ஊரடங்கு நேரத்தில் தடையை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதற்காக உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

உதயநிதி ஸ்டாலினுடன், நாகை மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன், சண்முகம் எம்.பி., டாக்டர். ராஜமூர்த்தி, தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தாலம் கல்யாணம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், ஜெகவீரபாண்டியன், பால அருட்செல்வன், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், எம்.எல்.ஏ.க்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சாக்கோட்டை அன்பழகன், வக்கீல் ராமசேயோன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மனோகரன், ஒன்றிய செயலாளர்கள் மங்கை சங்கர், முருகப்பா, பேரூர் செயலாளர் சம்சுதீன், கலைஞர் நினைவு உதவித்தொகை திட்ட ஒருங்கிணைப்பாளர் வக்கீல் புகழரசன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டு அங்கு உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த உதயநிதிஸ்டாலினை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்.

இதைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரசார பயணத்துக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதால், அ.தி.மு.க. அரசு என்னை தடுத்து நிறுத்தி கைது செய்து வருகிறது. சென்னையில் அமித்ஷா பங்கேற்ற அரசு விழாவில் கூட்டம் கூட்டினார்கள். அங்கு கொரோனா வராதா? அ.தி.மு.க.வுக்கு ஒரு நீதி, மற்ற கட்சிகளுக்கு ஒரு நீதியா?

எங்களுடைய பிரசாரத்தை நடத்த அரசு அனுமதி வழங்க வேண்டும். இந்த பிரச்சினை குறித்து தி.மு.க. தலைவர் அறிவுறுத்தலின்படி கோர்ட்டுக்கு செல்ல இருக்கிறேன்.

அ.தி.மு.க. அரசின் இடையூறையும் தாண்டி எனது பிரசார பயணம் தொடரும். நாகை மாவட்டம் கள்ளிமேடு பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையால் 2,500 ஏக்கர் விளை நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் என்னிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் அது இல்லை என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறுகிறார். மக்கள் பொய் சொல்கிறார்களா? அல்லது ஓ.எஸ்.மணியன் பொய் சொல்கிறாரா? மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகின்றன. அ.தி.மு.க. அரசு வேளாண் மசோதாவை ஆதரித்து கையெழுத்திட்டுள்ளது. பா.ஜனதா அரசு விவசாயத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு அ.தி.மு.க. அரசு துணை போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com