

மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மணலூரில் ரேணுகாம்பாள் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து நேற்று காலை யாகசாலை பூஜை, கோ பூஜை, பூர்ணாகுதி நடைபெற்றது. பின்னர் கடம் புறப்பாடாகி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, ரேணுகாம்பாள் கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கிடையே கிராமத்தில் உள்ள ஒரு தரப்பினர் அம்மனுக்கு தாலி மற்றும் பூஜை பொருட்களை எடுத்துவந்து கோவிலில் வைத்தனர். பின்னர் அவர்கள் சாமி தரிசனம் செய்ய சென்றனர். ஆனால் அவர்களை ஊர்தரப்பினர் கோவிலுக்கு உள்ளே செல்லக்கூடாது என தடுத்ததாக தெரிகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர், திடீரென சங்கராபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் சாலையின் குறுக்கே கற்களை போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்த வருவாய் ஆய்வாளர் கோவிந்தராஜ், கிராம நிர்வாக அலுவலர் முருகன், சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி(பொறுப்பு), வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தினர். அப்போது ஒருதரப்பினர் நாங்கள் கோவிலுக்கு செல்லமாட்டோம், தகராறில் ஈடுபடமாட்டோம் என்று கூறி, அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் இருப்பதால் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.