அரசு புறம்போக்கு நிலத்தில் இருக்கும் 78 குடும்பத்தினர் வீடுகளை காலி செய்ய பொதுப்பணித்துறை நோட்டீஸ்; பாதிக்கப்பட்டவர்களுடன் சுப்பராயன் எம்.பி. சந்திப்பு

நம்பியூர் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கும் 78 குடும்பத்தினர் தங்களுடைய வீடுகளை காலி செய்ய வேண்டும் என பொதுப்பணித்துற நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களை திருப்பூர் சுப்பராயன் எம்.பி. சந்தித்து பேசினார்.
அரசு புறம்போக்கு நிலத்தில் இருக்கும் 78 குடும்பத்தினர் வீடுகளை காலி செய்ய பொதுப்பணித்துறை நோட்டீஸ்; பாதிக்கப்பட்டவர்களுடன் சுப்பராயன் எம்.பி. சந்திப்பு
Published on

நம்பியூர்,

நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதி கேங்குழி. இந்த பகுதியில் 78 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் அந்த பகுதியில் குடியிருந்து வருகிறார்கள். இந்த நிலையில் 78 பேரும் தங்களுடைய வீடுகளை காலி செய்ய வேண்டும் என பொதுப்பணித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதுபற்றி அறிந்தும் திருப்பூர் சுப்பராயன் எம்.பி. அந்த பகுதிக்கு வந்து பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவரிடம் பொதுமக்கள் கூறியதாவது:-

நாங்கள் இந்த இடத்தில் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எனவே எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். மேலும் பல்வேறு போராட்டங்களும் நடத்தி உள்ளோம்.

இந்த பகுதியில் பேரூராட்சி சார்பில் எங்களுக்கு சாலை வசதி, தெருவிளக்கு வசதி, குடிநீர் வசதி போன்றவை ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அதுமட்டுமின்றி இங்கு குடியிருப்பதற்கான ஆதார் அட்ட, ரேஷன் கார்டு போன்ற அனைத்து ஆவணங்களும் உள்ளன. ஆனாலும் எங்களுக்கு இன்னும் பட்டா கொடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் 78 வீடுகளை காலி செய்ய பொதுப்பணித்துறை சார்பில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு எங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

அதற்கு பதில் அளித்து சுப்பராயன் எம்.பி. கூறுகையில், கேங்குழி பகுதியில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்குவது குறித்து அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். மேலும் இதுபற்றி வளர்ச்சிகுழு கூட்டத்தில் மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்கப்படும். இங்குள்ளவர்களுக்கு பட்டா தரவில்லை என்றால் எனது தலைமையில் இங்கு உண்ணாவிரதம் நடைபெறும், என்றார்.

இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் நம்பியூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் செந்தில்குமார், ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.வி.சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ. சுப்பிரமணியம், பழனிச்சாமி, சண்முகம், வேலுச்சாமி, ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com