பாவூர்சத்திரம் அருகே பயங்கரம்: பஞ்சாயத்து ஊழியர் அடித்துக்கொலை முன்விரோதத்தில் தீர்த்துக்கட்டிய 3 பேர் கைது

பாவூர்சத்திரம் அருகே முன்விரோதத்தில் பஞ்சாயத்து ஊழியரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாவூர்சத்திரம் அருகே பயங்கரம்: பஞ்சாயத்து ஊழியர் அடித்துக்கொலை முன்விரோதத்தில் தீர்த்துக்கட்டிய 3 பேர் கைது
Published on

பாவூர்சத்திரம்,

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் வைத்திலிங்கபுரத்தை சேர்ந்தவர் தர்மர் (வயது 55). இவர் ஆவுடையானூர் பஞ்சாயத்தில் குடிநீர் தொட்டி ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். பஞ்சாயத்து அலுவலகத்தின் பின்புறம் குடிநீர் ஆபரேட்டர்கள் தங்கும் அறை உள்ளது.

நேற்று முன்தினம் தர்மர் தனது வேலைகளை முடித்துவிட்டு இரவில் அந்த அறையில் தங்கினார். நேற்று அதிகாலையில் மற்றொரு பணியாளர் ஒருவர் அங்கு சென்று அறையை திறந்தார். அங்கு தர்மர் ரத்தக்காயத்துடன் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் அக்கம்பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தார். அவர்கள் இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில், ஆலங்குளம் துணை சூப்பிரண்டு சுபாஷினி, பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். மேலும் தடயவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்களும் வந்து, அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.அது அங்கிருந்து மோப்பம் பிடித்து, அருகே உள்ள தெருக்களில் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. பின்னர் தர்மரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அருகே பள்ளி வளாகத்தில் கிடந்த இரும்பு கம்பியை போலீசார் கைப்பற்றினர். எனவே இரும்பு கம்பியால் தர்மர் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த பயங்கர கொலை தொடர்பாக பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சுலைமான் (23), பெரியராசா (55), அவருடைய மகன் கலையரசன் (22) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்களுக்கும், தர்மருக்கும் இடையே கடந்த மாதம் வைத்திலிங்கபுரத்தில் நடந்த பொங்கல் நிகழ்ச்சியில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில் சுலைமான் ஏற்கனவே பாவூர்சத்திரம் போலீசில் ஒரு வழக்கில் கைதாகி வெளியே வந்தார். இதற்கும் தர்மர் தான் காரணம் என நினைத்து அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆவுடையானூர் பள்ளி அருகே தர்மர் வந்தபோது சுலைமான், பெரியராசா, கலையரசன் ஆகிய 3 பேரும் வழிமறித்து தகராறு செய்துள்ளனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து தூங்கிக் கொண்டிருந்த தர்மரை அவர்கள் 3 பேரும் சேர்ந்து இரும்பு கம்பி மற்றும் ஆயுதங்களால் அடித்துக் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அவரது செல்போனை எடுத்துக் கொண்டு 3 பேரும் தப்பி ஓடினர். ஓடும் வழியில் தர்மருடைய செல்போன் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை அங்குள்ள தனியார் பள்ளி வளாகத்திற்குள் வீசிச் சென்றதும் தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட தர்மருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். பஞ்சாயத்து ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com