

பெண்ணாடம்,
பெண்ணாடம் அருகே உள்ளது நந்திமங்கலம் கிராமம். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் உள்ள தெருக்களில் சாலை வசதி என்பது முறையாக இல்லை. இதனால் மழைக்காலங்களில், இவை அனைத்தும் சேறும், சகதியுமாக மாறி மக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்றுவிடும்.
இதை சரி செய்து தரக்கோரி கிராம மக்கள் தரப்பில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால் இதுநாள் வரைக்கும் அதிகாரிகளுக்கு இவர்களது குரல் கேட்கவில்லை.
இந்த நிலையில் தற்போது பருவமழை தொடங்கி, பரவலாக பெய்து வருகிறது. இதனால் கிராமத்து சாலை வழக்கம் போல் சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இதோடு சாக்கடை நீரும் கலந்து நிற்கிறது. எனவே சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். அப்போது கிராம மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் உள்ள ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் சாலை அமைக்க முன்வரவில்லை என்றால், அடுத்த கட்டமாக தாரநல்லூர்-பெண்ணாடம் சாலையில் மறியலில் ஈடுபடுவோம் என்று கூறி அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.