பெருந்துறை அருகே, போலி மதுபான ஆலை நடத்திய 7 பேர் கைது - மதுபாட்டில்கள் - வாகனங்கள் பறிமுதல்

பெருந்துறை அருகே போலி மதுபான ஆலை நடத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள், வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பெருந்துறை அருகே, போலி மதுபான ஆலை நடத்திய 7 பேர் கைது - மதுபாட்டில்கள் - வாகனங்கள் பறிமுதல்
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே திருவாச்சி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் போலி மதுபான ஆலை செயல்பட்டு வருவதாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனுக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அவருடைய உத்தரவின்பேரில் ஈரோடு மதுவிலக்கு போலீசார் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினார்கள். அங்குள்ள ஒரு குடோனுக்குள் போலீசார் நுழைந்தவுடன், அங்கிருந்த கும்பல் தப்பி செல்ல முயன்றது.

இதைத்தொடர்ந்து போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். அதைத்தொடர்ந்து அங்கு சோதனையிட்டபோது, அனுமதியின்றி மதுபானம் தயாரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பிடிபட்டவர்களை போலீசார் ஈரோடு மதுவிலக்கு பிரிவு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் பிடிபட்டவர்கள், கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுசாலை சென்னசத்திரம் பகுதியை சேர்ந்த மாதேஸ் (வயது 42), ஈரோடு திண்டல் பகுதியை சேர்ந்த சம்பத்குமார் (45), சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சின்னப்பம்பட்டி பகுதியை சேர்ந்த கருப்பண்ணின் மகன் குமார் (29), அதே பகுதியை சேர்ந்த பெரியசாமியின் மகன் வெங்கடாசலம் (29), அர்த்தனாரி (33), ஈரோடு மாவட்டம் பவானி தேவபுரத்தை சேர்ந்த ராஜேஷ் (44), பவானி கொக்காரம்மன் நகர் முதல் வீதியை சேர்ந்த சரவணகுமார் (32) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைதான சம்பத்குமார் ஏற்கனவே வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசியை கடத்திய வழக்கில் தொடர்புடையவர். தற்போது அவர் போலி மதுபான ஆலையை நடத்தி வந்துள்ளார். கைதான கும்பலிடம் இருந்து 2 ஆயிரத்து 856 போலி மதுபாட்டில்கள், மதுபானம் தயாரிக்க பயன்படும் எந்திரங்கள், காலி மதுபாட்டில்கள், 2 பேரல்கள், 30 லிட்டர் எரிசாராயம், 3 வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை சேர்ந்த ஜெகதீசன், பெங்களூருவை சேர்ந்த ராமு ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com