

பொள்ளாச்சி,
கோவையில் இருந்து 70 பயணிகளுடன் அதிவேகமாக பொள்ளாச்சி நோக்கி தனியார் பஸ் ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. பொள்ளாச்சி அருகே உள்ள சந்தேகவுண்டன்பாளையம் பிரிவில் வந்தபோது, மற்றொரு தனியார் பஸ்சை முந்திக்கொண்டு வேகமாக சென்றது. இந்த நிலையில் அந்த பஸ் நிலைத்தடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்தது.
பஸ்சின் முன்பக்க, பின்பக்க கண்ணாடிகள் உடைந்து சிதறின. பஸ்சின் முன்பகுதி நொறுங்கியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் பீதியில் அலறினார்கள். பலர் ரத்த காயங்களுடன் துடித்தனர்.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் ஓடிவந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். உடனே ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன. இதனைதொடர்ந்து காயம் அடைந்தவர்கள், 6 ஆம்புலன்ஸ்களில் ஏற்றப்பட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த பரிமளம் (வயது 73), ஜெயராமன் (21), பாஸ்கர் (51), சூலக்கல்லை சேர்ந்த பஸ் டிரைவர் கார்த்திக் (34), கண்டக்டர் சாகுல் அமீது (42), நவாப் செரீப் (28), தமிழரசி (21), முருகம்மாள் (45), சுந்தர்ராஜ் (48), ரித்திக் (13), மதுமிதா (15), மணிகண்டன் (42), சக்திவேல் (43), மதுபிரியா (38), மாகாளி (35), பாப்பாத்தி (66) உள்பட 35 பேர் காயம் அடைந்தனர்.
விபத்து நடந்த இடத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.
இதற்கிடையில் பொள்ளாச்சி-கோவை ரோட்டில் அடிக்கடி தனியார் பஸ்கள் பயணிகளை ஏற்றிச்செல்வதில் போட்டிபோடுவதாலும், அதிக வேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. ஆகவே போக்குவரத்து அதிகாரிகள், போலீசார் இணைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் திடீரென்று சாலைமறியல் செய்ய முயற்சி செய்தனர். அப்போது அங்கு பாதுகாப்புக்காக நின்று இருந்த போலீசார் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து வடக்கிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.