சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டு, காளைகள் முட்டியதில் 2 பேர் பலி - படுகாயம் அடைந்த 12 பேருக்கு தீவிர சிகிச்சை

மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 12 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டு, காளைகள் முட்டியதில் 2 பேர் பலி - படுகாயம் அடைந்த 12 பேருக்கு தீவிர சிகிச்சை
Published on

திருப்பத்தூர்,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கத்தில், மாணிக்க நாச்சியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழாவின் போது மஞ்சுவிரட்டு நடைபெறும்.

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் மஞ்சுவிரட்டுகளில் இந்த மஞ்சுவிரட்டும் முக்கியமான ஒன்றாகும். இந்த ஆண்டு திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

மஞ்சுவிரட்டில் பங்கேற்க வந்த காளைகளுக்கு கால்நடை டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர். பின்னர் கிராமத்தார்கள் கோவில் காளைகளுடன் மேள தாளத்துடன் ஊர்வலமாக வந்து தொழு காளைகளுக்கு வேட்டி துண்டுகள் வழங்கினர். அதன் பின்னர் மஞ்சுவிரட்டு தொழுவில் இருந்து வாடிவாசல் வழியாக 50-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

முன்னதாக வாடிவாசலுக்குள் குறைந்த அளவே மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர். வாடிவாசலுக்கு வெளியே கண்மாய் பகுதியில் 600-க்கும் மேற்பட்ட காளைகள் கட்டு மாடுகளாக அவிழ்த்து விடப் பட்டன.

இந்த மஞ்சுவிரட்டுக்காக சிவகங்கை மாவட்டம் மட்டுமின்றி திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான காளைகள் பங்கேற்றன. ஏராளமான மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக் கான பார்வையாளர்கள்அங்கு திரண்டிருந்தனர். அந்தக் கூட்டத்திற்குள் புகுந்து காளைகள் முட்டியதில் காரைக்குடி அருகே உள்ள அமராவதிபுதூரைச் சேர்ந்த சேவுகன் (வயது 45) மற்றும் கே.வலையபட்டி கிராமத்தைச் சேர்ந்த அம்மாசி என்பவரது மகன் ராஜூ (23) ஆகிய 2 பேர் மஞ்சுவிரட்டுத் திடலிலேயே இறந்தனர்.

இது தவிர காளைகள் முட்டியதில் அழகாபுரியைச் சேர்ந்த சின்னக்கருப்பன் மகன் சின்னச்சாமி(38) என்பவருக்கு குடல் சரிந்தது. ஆபத்தான நிலையில் அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர், மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும் காளைகள் முட்டியதில் இளங்கோவன்(23),குமார் (42), சின்னக்கருப்பன்(42), சரவணன்(26), சின்னையா(65), செல்வமணி(29), உள்பட 52 பேர் காயம் அடைந்தனர். இதில் 11 பேர் படுகாயம் அடைந்த நிலையில் சிவகங்கை, மதுரை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மஞ்சுவிரட்டில் மாடுகள் முட்டியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com