

சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள ரெங்கசமுத்திரப்பட்டியை சேர்ந்தவர் செல்வம் என்கிற செல்வராஜ்(வயது 40). டி.கான்சாபுரம் தி.மு.க. ஊராட்சி கிளை செயலாளராக இருந்தார். அதே பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி கணேஷ்வரி அதே பகுதியில் உள்ள இன்னொரு பட்டாசு ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
இந்தநிலையில் செல்வம் கடந்த 31-ந்தேதி இரவு பட்டாசு ஆலைக்கு காவல் பணிக்காக சென்றவர் பின்னர் மறுநாள் காலை வீடு திரும்பவில்லை. அவரது செல்போனுக்கு வீட்டில் உள்ளவர்கள் அழைத்தபோது சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதற்கிடையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அங்கு சென்று இருப்பார் என்று வீட்டில் உள்ளவர்கள் செல்வத்தை தேடாமல் இருந்து விட்டனர்.
இந்தநிலையில் செல்வம் தான் வேலை செய்து வந்த பட்டாசு ஆலையின் அருகில் உள்ள கிணற்றில் பிணமாக மிதப்பதாக அப்பகுதி மக்கள் நேற்று மாரனேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது அங்கு செல்வம் துணியால் கழுத்து இறுக்கிய நிலையில் பிணமாக கிணற்றில் வீசப்பட்டது தெரியவந்தது. சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் செல்வத்தின் உடல் மற்றும் இருசக்கர வாகனம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.
செல்வம் கழுத்தில் துணியால் இறுக்கப்பட்டு இருந்ததால் இது கொலை என முடிவு செய்த மாரனேரி போலீசார் அதற்கான காரணம் குறித்து விசாரிக்க தொடங்கினர். அப்போது செல்வம் வேலை செய்த அதே பட்டாசு ஆலையில் தங்கி வேலை செய்த அசாம் மாநிலத்தை சேர்ந்த உசேன்அலி(45) மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 12 பேர் மாயமானது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. செல்வத்தின் கொலைக்கும், அசாம் தொழிலாளர்கள் மாயமானதுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கும் என்ற கோணத்தில் போலீசாரின் விசாரணை தீவிரம் அடைந்தது.
விசாரணையில் பட்டாசு ஆலை அருகில் உள்ள குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கி இருந்த அசாம் மாநில தொழிலாளர்களுக்கு இடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகராறு ஏற்பட்டுள்ளது. இவர்களை சமாதானம் செய்ய ஆலை நிர்வாகம் செல்வத்தை 31-ந்தேதி இரவு அனுப்பி வைத்ததும் தெரியவந்தது.
அப்போது தகராறை விலக்க சென்ற செல்வத்தை அங்குள்ளவர்கள் கொலை செய்து கிணற்றில் வீசி இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். கொலை நடந்த அடுத்தநாள் அசாம் தொழிலாளர்கள் பட்டாசு ஆலைக்கு சொந்தமான சரக்கு வாகனத்தில் தப்பி சென்றுள்ளனர். இந்த வழக்கில் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினால் தான் செல்வம் கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.